சென்னை: தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற பட்டியலில் ஒருவர் பெயரை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஐஏஎஸ் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பது தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த பதவிக்கான ரேஸில் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் உள்ளனர். அவர்களில் முருகானந்தம், சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன், ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. இவர்களில் சிவதாஸ் மீனாவின் பெயர்தான் டிக் அடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
யார் இந்த சிவதாஸ் மீனா: முதல்வரின் குட் வில் புக்கில் இருக்கும் சிவதாஸ் மீனா 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் கேட்ரியாவார். இவரது சொந்த மாநிலம் ராஜஸ்தான். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணியில் அனுபவம் உள்ளவர்.
ஜெ. மறைவுக்கு பிறகு என்ன ஆனது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயல்களில் ஒருவராக சிவதாஸ் மீனா பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்போது சிவதாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் சிவதாஸ் மீனா மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
ஸ்டாலினின் குட் வில் புக்: தற்போது அவர் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் ஸ்டாலினின் குட்வில் புக்கில் இடம்பெற்றுள்ளார். முதல்வர் ஸ்டாலினை பொருத்தமட்டில் அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதற்கும் அரசு இயந்திரம் (government machinery) வேகம் குறையாமல் சீராக இயங்குவதற்கும் யார் பொருத்தமாக இருப்பார்களோ அவரைத்தான் இந்த உயரிய பதவியான தலைமைச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்வார்.
சிவதாஸ் மீனா எப்படிப்பட்டவர்: சிவதாஸ் மீனா அரசு ஊழியர்களை கடுமையாக வேலை வாங்கக் கூடியவர். இதனால் ஸ்டாலினின் மனம் கோணாமல் அனைத்துத் துறைகளிலும் பணிகளை இவரால் வேகம் குறையாமல் செயல்படுத்த முடியும் என்கிறார்கள். அதனால் முதல்வர் ஸ்டாலினின் சாய்ஸ் இவராகத்தான் இருக்கும் என்கிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்ற போது தமிழக தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனை மாற்றிவிட்டு இறையன்புவை ஸ்டாலின் கொண்டு வந்தார்.
இறையன்புவின் செயல்பாடுகள்: இந்த 2 ஆண்டுகள் இறையன்புவின் செயல்பாடுகளால் முதல்வர் ஸ்டாலின் உச்சி குளிர்ந்துள்ளாராம். அதனால் அவருக்கே பணி நீட்டிப்பு வழங்கலாம் என யோசனை இருந்ததாம். ஆனால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு கொடுத்ததற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது அதையே நாம் செய்தால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பவர் என்பதால் புதிய தலைமை செயலாளரை நியமிக்க வேண்டிய நிர்பந்தம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாம்.