பில்கிஸ் பானு வழக்கு: `நான் விசாரிப்பதைத் தடுக்க நினைக்கிறீர்களா?’ – கொதித்த நீதிபதி | பின்னணி என்ன?

குஜராத்தில் 2002-ம் ஆண்டு பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகளை, தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே குஜராத் மாநில அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்ட அவர்களை, விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் வைத்து மாலைகள் அணிவித்து கௌரவித்தனர்.

பில்கிஸ் பானோ

இவர்களின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுத்தாக்கல் செய்தனர். அவற்றை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்துவருகிறது. 11 குற்றவாளிகளின் விடுதலை குறித்த ஆவணங்களைத் தயாராக வைத்திருக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய, மாநில அரசுகள் ஆவணங்களை அளிக்கவில்லை. மாறாக, மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்துவருவதாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், குஜராத் அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தனர்.

நீதிபதி கே.எம்.ஜோசப்

இந்த வழக்கில், நீதிபதி ஜே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அமர்வு கறாராக விசாரித்துவருவதால், வழக்கை இழுத்தடிக்கும் உத்தியை குற்றவாளிகள் தரப்பு கையாண்டுவருவதாக விமர்சனம் எழுந்தது. இதற்கு ஒரு முக்கியக் காரணமும் இருக்கிறது. நீதிபதி கே.எம்.ஜோசப் வரும் ஜூன் 16-ம் தேதி ஓய்வுபெறவிருக்கிறார். ஆனால், மே 19-ம் தேதிக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்குவதால், நீதிபதி கே.எம்.ஜோசப்பின் கடைசி பணி நாள் மே 19-ம் தேதியாகும். எனவே, அவர் பணி ஓய்வு பெறும்வரையில் இந்த வழக்கை இழுத்தடிக்கலாம் என்று பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்த வழக்கு குறித்த நோட்டீஸ் தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஒரு பின் ஒருவராக எழுப்பிய குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள், பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமென்று கேட்டனர். அதையடுத்து, வழக்கை இழுத்தடிக்க முயலும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களிடம், “இந்த வழக்கில் முடிவெடுக்கும் அமர்வில் நான் இருக்கக்கூடாது என்று நீங்கள் நினைப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது” என்று நீதிபதி கே.எம்.ஜோசப் கூறினார்.

“இந்த வழக்கை நான் விசாரிக்கக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வழக்கு எங்களிடம் வந்த முதல் நாளிலேயே நாங்கள் நோட்டீஸ் வழங்கிவிட்டோம். எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். ஆனால், இதுவா இந்த வழக்கை கொண்டுசெல்லும் முறை? வழக்கை இழுத்தடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முறை மிகத் தெளிவாகத் தெரிகிறது. வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தபோதிலும், யாராவது ஒருவர் வந்து எங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை என்கிறார்கள்… அல்லது, பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என்கிறார்கள்” என்று நீதிபதி கே.எம்.ஜோசப் காட்டமாகக் கூறினார்.

குஜராத் வன்முறை

ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டதும் கொடூரமான குற்றங்கள். இந்தப் படுகொலைகள் தனித்த ஒரு கொலையுடன் ஒப்பிடக் கூடாது’ என்றார் நீதிபதி கே.எம்.ஜோசப்.

“கர்ப்பிணி பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டார்கள். அப்பாவிகள் 14 பேர் கொலை செய்யப்பட்டார்கள். அந்த வழக்கு வேறொரு மாநிலத்துக்கு (மும்பை) மாற்றப்பட்டது. இதை வேறொரு பாலியல் வன்கொடுமை வழக்குடனும் வேறொரு கொலையுடனும் எப்படி ஒப்பிட முடியும்? இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்திருக்கிறீர்கள் என்றால், இதன் மூலம் நீங்கள் சொல்லும் செய்தி என்ன?” என்று மத்திய அரசையும் குஜராத் அரசையும் நோக்கி நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பில்கிஸ் பானுவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஷோபா குப்தா, ‘குற்றவாளிகள் தரப்பு வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிக்கிறது. நீங்கள் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிவெடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். மனுதாரர்களில் ஒருவரின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘இதுபோன்ற தந்திரங்களை நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது. அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக, நீதிபதிகள் வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்ளக்கூடாது’ என்றார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி ஜோசப், “நாங்கள் வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்ளவில்லை. அதை விசாரிப்பதில் எங்களுக்கு எந்த சிரமும் இல்லை. ஆனால், ஜூன் 16-ம் தேதி நான் பணி ஓய்வுபெறுகிறேன். கோடை விடுமுறை விடுவதற்கு முன்பாக நீதிமன்றத்தின் கடைசிப் பணி நாள் மே 19-ம் தேதி. கோடை விடுமுறை காலத்தில் வழக்கில் வாதாடுங்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இந்த வழக்கு எங்களிடம் முன்னதாகவே வந்திருந்தால், வேறு மாதிரியாக இருந்திருக்கும். என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன். ஆனால், இப்போது போதிய நேரம் இல்லை” என்றார்.

உச்ச நீதிமன்றம்

மே 19-ம் தேதி முன்பாக விசாரணையை முடிப்பதற்கான யோசனைக்கு குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது கோபப்பட்ட நீதிபதி ஜோசப், “உங்கள் செயல்களுக்கு இதுவரை நான் அமைதியாகவே இருக்கிறேன். என்னை ஏதாவது பேசவைத்துவிடாதீர்கள். உங்கள் வழக்குதாரருக்காக நீங்கள் ஆஜராகலாம். ஆனால், நீங்களும் நீதிமன்றத்தின் ஓர் அதிகாரி. உங்களுடைய இந்த இரட்டைக் கடமைகளை மறந்தவிடாதீர்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.