முதல்வருடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு: பையனூரில் வீடுகட்ட மறு ஆணை பிறப்பிப்பு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அண்மையில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முரளி ராமசாமி தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சந்திப்புக்கு பிறகு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றோம். எங்கள் கோரிக்கை மனுவையும் முதல்வரிடம் அளித்துள்ளோம். 2009ம் ஆண்டு திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்காக சென்னையை அடுத்துள்ள பையனூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

அதில் 10.5 ஏக்கர் நிலம், நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவு காலாவதியாகி இருந்தது. இந்த சூழ்நிலையில் அந்த அரசாணையை மீண்டும் முதல்வர் புதுப்பித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம். தமிழக அரசின் நல்லுறவோடு தயாரிப்பளார் சங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செல்ல இருக்கிறது. என்றார்.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் தமிழ் குமரன், இணைச் செயலாளர் சவுந்தர பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, எம்.எல்.ஏ அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.