மொஹாலி: ஐபிஎல்லில் நேற்றைய போட்டியில் மும்பை-பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது. போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா ‛டக்’ அவுட் ஆனதை பஞ்சாப் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்க்கும் வகையில் பதிவிட்டது. இதற்கு மும்பை அணி பதிலடி கொடுத்த நிலையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பஞ்சாப்பை கிண்டல் செய்தன.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.க்ஷக்ஷ
பஞ்சாப் அணி பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து அசத்தியது. அந்த அணியின் லிவிங்ஸ்டன் 82 ரன்களும் , ஜிதேஷ் ஷர்மா 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா ரன் ஏதுமின்றி டக் அவுட் ஆகி முதல் ஓவரிலேயே வெளியேறினார். இதனால் மும்பை ரசிகர்கள் மனம் உடைந்தனர்கள்.
இதையடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ரன் மழையை பொழிந்தனர். கேமரூன் கிரீன் 23 ரன்கள் எடுத்து வெளியேற இஷான் கிஷன்-சூர்யகுமார் யாதவ் ஜோடி அசத்தியது. இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்களுக்கும், இஷான் கிஷன் 41 பந்துகளில் 71 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியில் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மும்பை அணி 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா, டிம் டேவிட் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த போட்டியில் மும்பை கேப்டனர் ரோகித் ஷர்மா ரன் ஏதுவும் எடுக்காமல் அவுட்டானது பற்றி பஞ்சாப் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது. அதில் ரோகித் ஷர்மாவின் முதல் எழுத்தான R மற்றும் ‛டக்’ அவுட்டை குறிக்கும் வகையில் 0 ஆகியவற்றை சேர்த்து R0 என சிரிக்கும் ஸ்மைலியுடன் பதிவிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த மும்பை ரசிகர்கள் கொந்தளித்தனர்.
பஞ்சாப் அணியை விமர்சனம் செய்ய துவங்கினர். இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணி உடனடியாக பதிலடி கொடுத்தது. அதில் ரோகித் ஷர்மா 6 முறை(5 ஐபிஎல், ஒரு சாம்பியன் லீக்) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் பெயர்களில் ஆடியும் சாம்பியன் பட்டம் வெல்லாமல் பூஜ்ஜியமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. அதோடு இந்த பதிவை Respect எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடப்பட்டு இருந்தது. அதாவது மரியாதை கொடுங்கள் எனும் வகையில் பஞ்சாப்புக்கு மும்பை அணி பாடமெடுத்து இருந்தது.
மும்பை அணியின் இந்த பதிவை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீம் ஒன்றை பதிவிட்டது. அதாவது வெற்றிக்கொடிகட்டு படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகர் வடிவேலுவின் காட்சியான ‛‛என்னடா பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசிப்புட்ட” எனும் GIF பைலை மீம்போல் பதிவிட்டு இருந்தது. இதன்மூலம் மும்பை அணிக்கு ஆதரவாக சென்னை அணி களத்தில் குதித்து இருப்பது உண்மையானது.
ஐபிஎல்லை பொறுத்தமட்டில் சென்னை-மும்பை அணிகள் மோதும் போட்டி தான் ஹைவோல்டேஜ் போட்டியாக உள்ளன. இரு அணிகளுக்கும் நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில் இந்த அணிகள் மோதிக்கொண்டால் போட்டியில் நிச்சயம் அனல் பறக்கும். ஐபிஎல்லில் மும்பை இதுவரை 5 முறையும், சென்னை அணி 4 முறையும் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போன்று ஐபிஎல்லில் இரு அணிகளும் பரம எதிரிகளாக ரசிகர்களால் பார்க்கப்படும் நிலையில் மும்பை அணிக்கு ஆதரவாக சென்னை ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை இரு அணி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இதபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தனது ட்விட்டர் பதிவில் பஞ்சாப்புக்கு பதிலடி கொடுத்துள்ளது. அதில், ‛‛R200 X 3 என குறிப்பிட்டு ரோகித் ஷர்மாவின் 3 போட்டோக்களை ஒன்றாக்கி அவர் 3 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளதாக தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளது. இப்படி பஞ்சாப் அணியின் ஒரு ட்விட்டுக்கு மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகள் வரிந்து கட்டி பதிலடி கொடுத்தது பரபரப்பானதாக மாறியது. இதனால் வேறு வழியின்றி ரோகித் ஷர்மா டக் அவுட் என குறிப்பிட்டு பதிவிட்ட பதிவை பஞ்சாப் அணி டெலிட் செய்தது.