இன்றைய பேட்டியில் ஆளுநர் ரவி பேசிய கருத்துக்கள் குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளார்.
இது குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் ரவி, ‘ஆளுநர்’ பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆலாபனை பாடுகிறார். ஆரியத்துக்கு திராவிடத்துக்குத் தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார். சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார். தனக்குத் தோன்றும் புதிய காரணங்களை புனைவு காரணங்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சட்டத்துக்குப் புறம்பான விளக்கங்கள் சொல்கிறார்.
இப்படி ஆளுநர் பதவிக்கு அழகில்லாத, அடிப்படையில்லாத செயல்களை மட்டுமே செய்து வருகிறார்
ஆளுநர் ஆர்.என்.இரவி. தனிப்பட்ட இரவியாக இருந்தால் அதனை மதிக்கத் தேவையில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் ஆளுநராக அதுவும் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பதால் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இங்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது முதல், அவர் சொல்லி வரும் அபத்தமான கருத்துகளுக்கும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது தி.மு.க.
காரணம், அந்த அடிப்படையற்ற கருத்துகள் மறுக்கப்படாவிட்டால் அவை சரியானதோ என சிலரேனும்
தவறாக நினைத்துவிடக் கூடும். தமிழ்நாட்டின் ஜனநாயகச் சக்திகளின் கடுமையான கண்டனத்துக்குரியவராக அவர் இருந்து வருவதை நாட்டுமக்கள் நன்கு அறிவார்கள். 40-க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்குக் காரணமான ஆன்லைன் ரம்மி தடை மசோதாவைக் கூட பல மாதங்கள் தனது நாற்காலிக்கு கீழே போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார் ஆளுநர்.
சட்டமன்றத்தில் தமிழ்நாடு இவரது நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய அன்றுதான் உடனடியாகக் கையெழுத்து போட்டு அனுப்பினார். இதன் மூலம், இவர் எத்தகைய மனிதர் என்பதை மக்கள்
அறிந்திருப்பார்கள். இந்தநிலையில் இன்று ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு கண்டுபிடிப்புகளை சொல்லியுள்ளார்.
அந்த பேட்டியை முழுமையாகப் படிக்கும்போது, அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது. கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார் என்பதைத்தான் அந்தப் பேட்டி காட்டுகிறது. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட பதவி அல்ல.
அந்தப் பதவிக்கு வந்தவர், அதன் தன்மையோடுதான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் காட்ட முனையக் கூடாது. தரவுகள் அடிப்படையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு, ஆளுநர் அலுவலகம் உரிய விளக்கம் வழங்காமல் பொதுவாக நிதியமைச்சர் கூறியதை உண்மைக்கு புறம்பானது என்று சொல்வது சரியல்ல, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம்.
இவ்வளவு பல கேள்விகளைக் கேட்ட ஊடகவியலாளர், ‘ஆன்லைன் சூதாட்ட கம்பெனி உரிமையாளர்கள் உங்களைச் சந்தித்தார்களா?’ என்று ஏன் கேட்கவில்லை? அல்லது ஆளுநர் கேட்கக் கூடாது என்றாரா? ஆளுநர் ஆர்.என். ரவியை புரிந்து கொள்ள இது ஒன்றே போதும்! அவரைப் போல ஒரு பக்கம் பதிலளிக்கத் தேவையில்லை. இந்த ஒரு வரியே போதும்!’’ என கூறப்பட்டுள்ளது.