கண்டதும் சுட உத்தரவு.. மணிப்பூரில் கைமீறிப் போனது நிலைமை.. துப்பாக்கியை எடுக்கும் ராணுவம்!

இம்பால்:
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் கை மீறி சென்றதை அடுத்து, கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடும் உத்தரவை (Shoot At Sight) அம்மாநில அரசுபிறப்பித்துள்ளது. ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கியும் கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக மிகப்பெரிய வன்முறையும், கலவரமும் வெடித்து வருகிறது. மணிப்பூரில் பரவலாக வசிக்கும் ‘மெய்டெய்ஸ்’ சமூக மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் (scheduled Tribe) அந்தஸ்து வழங்கக் கோரி கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அந்த சமூக மக்களுக்கு எஸ்டி அந்தஸ்து கிடைப்பதற்கான சூழல் நிலவியது.

ரத்தக்களறியான மணிப்பூர்:
இது மணிப்பூரில் உள்ள பழங்குடியின சமூக மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இதையடுத்து, மெய்டெய்ஸ் சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து தரக்கூடாது எனக் கூறி, பழங்குடியின மக்கள் கடந்த சில தினங்களாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூரில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டமானது பழங்குடி மக்களுக்கும், பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையேயான மோதலாக மாறி, பின் கலவரமாக வெடித்தது.

அடக்க முடியவில்லை:
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதுடன் வீடுகள், கட்டிடங்களுக்கும் தீ வைத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மோதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மோதலை தடுக்க வரும் போலீஸார் மீதும் இரு தரப்பினருமே தாக்குதல் நடத்துவதால், போலீஸாரால் ஊருக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 3 தினங்களாக மணிப்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டு வருகிறது.

ராணுவத்தையே ஓடவிடும் மக்கள்:
நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த மத்திய உள்துறை அமைச்சகம், ராணுவத்தினரையும், துணை ராணுவ வீரர்களையும் மணிப்பூருக்கு அனுப்பியது. ஆனால், அவர்களாலும் இந்தக் கலவரத்தை அடக்க முடியவில்லை. ராணுவத்தினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், இருதரப்பு மக்களுமே மிகுந்த ஆக்ரோஷமாக இருப்பதால் அவர்களை அடக்குவது சிரமமான காரியமாக மாறியது. 144 தடை உத்தரவு பிறப்பித்த போதிலும் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை.

கண்டதும் சுட உத்தரவு:
இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பிரென் சிங் தலைமையில் இன்று மாலை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவ உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, தங்களுக்கு சற்று அதிக அதிகாரம் கொடுத்தால் மட்டுமே கலவரத்தை கட்டுப்படுத்துவது சாத்தியமாகும் என ராணுவத் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு மணிப்பூர் அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.