புதிய தொழில் சட்டத்தை தயாரிக்க நடவடிக்கை – அமைச்சர் மனுஷ நாணயக்கார

பல ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்திற்குப் பதிலாக, நவீன உலகத்திற்கு ஏற்றதும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தொழில் சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்….

‘2048ஆம் ஆண்டில் வெற்றி பெறுவோம் என்ற ஜனாதிபதியின் தொலை நோக்குடனான நாட்டின் அபிவிருத்தி இலக்கை எட்டும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த சட்ட கட்டமைப்புக்கு தொழில் சங்கங்கள், புத்திஜீவிகள் சமூக அமைப்புக்கள், தொழில் சங்கங்களில் அங்கத்துவம் வகிக்காதவர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சட்டம் குறித்து நாம் குறிப்பிட்ட போது, வழமை போன்றே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் குறை கூறினர். இவர்கள் எப்பொழுதும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுகின்னறனர் என்றும் அமைச்சர் கூறினார்.

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன் அவர்களின் கௌரவத்தையும் பாகாத்து, சர்வதேச தொழில் அமைப்பு ஏற்றுக்கொள்க்கொள்ளக்கூடிய புதிய தொழில் சட்டத்தை உருவாக்குவதுடன் தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் பாதுகாப்பு அவர்களின் உரிமை, விசேட தேவைகளை கொண்டுள்ளவர்களின் உரிமையை உறுதி செய்வதும் எமது நோக்கமாகும். மே தினத்தில் மாத்திரம் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் எழுப்பாது அவர்களின் நீடித்த நலனை இலக்காகக்கொண்டு நாம் செயல்படுகின்றோம் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.