புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் டெல்லி மந்திரியான சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு வெளியே, டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சிலர் சீருடையில் இல்லாமல், நாள் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டே உள்ளனர்.
இந்த விவகாரம் பற்றி டெல்லி காவல் ஆணையாளர் சஞ்சய் அரோராவுக்கு நாடாளுமன்ற மேலவை எம்.பி.க்களான ராகவ் சத்தா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் கடிதம் எழுதி உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
டெல்லி மக்கள் கெஜ்ரிவாலை 3 முறை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுத்து உள்ளனர். மக்களை பாதுகாக்க போலீசார் உள்ளனர். ஆனால், முதல்-மந்திரியை அவர்களால் பாதுகாக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு, கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு அருகே ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ள டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளிடம், அதுபற்றி கேட்கும்போது, சிறப்பு பணி என பதில் கூறுகின்றனர்.
என்ன சிறப்பு பணி அது? எந்த சட்டத்தின் கீழ் தனது சொந்த முதல்-மந்திரியை டெல்லி போலீசார் உளவு பார்க்கின்றனர்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆளில்லா விமானம் பறந்த சம்பவத்திற்கு பின் பாதுகாப்பு அதிகரிப்புக்கான அடையாளம் ஆக கூட இருக்கலாம் அல்லவா? என கேட்டதற்கு அவர், அதுபற்றி தொடர்புடைய நபரிடம் தகவல் தெரிவித்து இருக்க வேண்டும் என பரத்வாஜ் கூறியுள்ளார். ஆனால், டெல்லி போலீசார் இதுபற்றி எதுவும் கூற மறுத்து விட்டனர்.