கோடையில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக தொடரப்பட்ட வழக்கு – சராமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியராஜா என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “குழந்தைகள் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளும் விதமாக அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனால், திருநெல்வேலியில் இயங்கி வரும் ஜோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கட்டாய சிறப்பு வகுப்புகளில் பங்கெடுக்க வேண்டும் என்றும் 2023-24 -ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது.
ஆகவே, சிறப்பு வகுப்புகளுக்கு வர கட்டாய படுத்தும் ஜோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்றுத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்த மனு, நீதிபதிகள் தண்டபாணி மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் ‘’இந்த பிரச்சனைக்காக பெற்றோர்கள் யாரும் நீதிமன்றத்தை நாடவில்லை. அப்படி இருக்கும் போது வழக்கறிஞர் எப்படி இதனை பொதுநல மனுவாக தாக்கல் செய்தார்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ’இது உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்ட மனு போல் தெரிகிற்து.
அதனால், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், இந்த தொகையை அரசு பள்ளி ஒன்றின் கழிப்பறை பராமரிப்பிற்காக செலவிடவும்’ உத்திரவிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.