புதுடில்லி: நம் நாட்டில் இன்டர்நெட் பயன்படுத்துவோரில், 52 சதவீதம் பேர், ‘ஆன்லைன்’ வாயிலாக செய்திகளை தேடுகின்றனர் என, ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், ௮௦ சதவீதம் பேர் போலி, பொய் செய்திகளை பார்ப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘கூகுள்’ இணையதளமும், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ‘கான்டார்’ என்ற ஆய்வு நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் இணைய பயன்பாடு குறித்த ஆய்வை நடத்தின. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில், 72.9 கோடி பேர் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையதள சேவையைப் பயன்படுத்துகின்றனர்.இதில், 52 சதவீதம் பேர், அதாவது, 37.9 கோடி பேர், ஆன்லைன், சமூக வலைதளம், இணையதளம் வாயிலாக செய்திகளை தேடுகின்றனர்.செய்திகள் தேடுவோரில், 37 சதவீதத்தினர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில், ௬௩ சதவீதத்தினர் கிராமப்புறத்தைச்
சேர்ந்தவர்கள்.
பெரும்பாலானோர், ‘வீடியோ’ வாயிலாகவே செய்திகளை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். அதற்கடுத்து, எழுத்து மற்றும் ஆடியோ வாயிலாக செய்திகளை அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.
செய்திகளை தேடுவோரில், 93 சதவீதம் பேர், ‘யு டியூப்’ வாயிலாகவே பார்க்க விரும்புகின்றனர். 88 சதவீதம் பேர், சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.ஆன்லைன் வாயிலாக செய்தியை பார்ப்போரில், 80 சதவீதம் பேர், பொய் மற்றும் போலி செய்திகளை சந்திக்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை தேடுவோரில், 76 சதவீதம் பேர், பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களை பார்க்க விரும்புகின்றனர். 72 சதவீதம் பேர் குற்ற சம்பவங்கள், பாதுகாப்பு தொடர்பாகவும், ௭௧ சதவீதம் பேர் தேசிய மற்றும் மாநிலம் தொடர்பான செய்திகளையும் தேடுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement