ஜிமிக்கி கம்மலை ஓவர்டேக் செய்த தர்ஷனா
கடந்த 2017ல் மோகன்லால் நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் டைரக்சனில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம் வெளிப்பாடிண்டே புஸ்தகம். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறினாலும் எதிர்பாராத விதமாக இந்த படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் என்கிற பாடல் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பெண்கள் பலரும் விதவிதமாக நடனமாடி அவற்றை சோசியல் மீடியாவில் வீடியோக்களாக வெளியிட்டு வைரல் ஆக்கினர்.
இந்த பாடல் இப்போது வரை யூடியூபில் 110 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு முதலிடத்தை பிடித்த மலையாள பாடல் என்கிற பெருமையை தக்க வைத்திருந்தது. இந்தப் பாடலுக்கு ஷான் ரகுமான் இசை அமைத்திருந்தார். அதேசமயம் கடந்த வருடம் மோகன்லாலின் மகன் பிரணவ் நடிப்பில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ஹிருதயம் என்கிற படத்தில் இடம்பெற்ற தர்ஷனா என்கிற பாடல் வெளியான சமயத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்தபாடல் 111 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ஜிமிக்கி கம்மல் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது. இந்த பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார்.