சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், சில இடங்களில் வெப்பநிலையும் உயர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக மே 5, 6, 7-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, மே 8-ம் தேதி சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேநேரத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வரும் 6, 7, 8-ம் தேதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை உயரக்கூடும்.
மே 4-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 15 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 12 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 11 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, மீமிசல், பெருங்களூர் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாக வலுபெறக்கூடும். இதனால் வரும் 7, 8-ம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.