வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொச்சி: ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு, கேரளாவைச் சேர்ந்த சீரோ மலபார் கத்தோலிக்க திருச் சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள், தங்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஉள்ளன.
விருப்பம்
இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. என்றாலும், இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க, அரசு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபை, ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த திருச்சபையின் பொது விவகார ஆணையம் தெரிவித்து உள்ளதாவது:
ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது இயற்கைக்கு முரணானது. மேலும், நாட்டில் தற்போதுள்ள குடும்ப அமைப்பு முறைக்கு அநீதியை விளைவிக்கும் செயலாகவும் இருக்கும். நம் கலாசாரத்தில் திருமணம் என்பது, எதிர் எதிர் பாலினத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு இடையிலான உறவை குறிக்கிறது.
வரவேற்கத்தக்கது
ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால், குழந்தைகள் மற்றும் விலங்குகள் மீதான உடல் ரீதியான ஈர்ப்பு போன்ற பாலியல் பிரச்னைகளையும் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுவதற்கும் துாண்டுகோலாக இருக்கும்.
இந்த விஷயத்தில் எங்கள் நிலையை விளக்கி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement