சென்னை: மே 23-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்வது உறுதியாகி உள்ளது. தமிழ் நாட்டிற்கு முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டாளர்களைச் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்கிறார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக தொடர் முதலீடுகள் உலகம் முழுவதிலும் இருந்து ஈர்க்கப்பட்டு வருகின்றன.
இதற்ககா வரும் 2024 ஜனவரி மாதம் 11, 12-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து முயற்சிகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்று வந்தார். துபாய், அபுதாபியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பின் மூலம், தமிழ்நாட்டில் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.2,600 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது .
இந்நிலையில் அடுத்தகட்டமாக முதலீட்டாளர்களைச் சந்திக்க வரும் மே 23-ம் தேதி இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளுக்குச் செல்ல முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். ,
முதல்வர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதற்கான அனுமதி மத்திய அரசிடம் கோரப்பட்டது. இந்த அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.
எனவேவரும் 23-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத் திட்டம் தொடர்பாக, கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டு, ஒப்பதல் பெறப்பட்டது.