திடீரென உயிரிழந்த புழல் சிறை கைதிகள் – நடந்தது என்ன?
சென்னையில் உள்ள அம்பத்தூர் அருகே கோட்டூர் சூர்யா நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவர், மயிலாப்பூர் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக அவர் கடந்த மாதம் 23-ந் தேதி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவரும் போக்ஸோ சட்டத்தில் பண்ருட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டு அதனால், அவதிப்பட்டு வந்ததால், கடந்த மாதம் 14-ந் தேதி சிகிச்சைக்காக புழல் சிறைக்கு மாற்றப்பட்ட பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் புழல் காவல் ஆய்வாளர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து இருவரும் உடல்நிலை குறைவால் தான் உயிரிழந்தார்களா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்.