இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வன்முறையாளர்களை கண்டவுடன் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக தான் தற்போது ஆர்ட்டிக்கிள் 355யை மத்திய அரசு அமல்படுத்தி உள்ள பரபர தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மணிப்பூர், திரிப்புரா, சிக்கிம், நாகலாந்து, அசாம், மேகாலயா, மிசோராம் உள்ளிட்டவை வடகிழக்கு மாநிலங்களாக அழைக்கப்படுகின்றன. நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகையில் இந்த மாநிலங்கள் மிகவும் சிறியவையாக உள்ளன.
இந்த மாநிலங்களில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்திலும் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் பிரச்சனை உள்ளது.
அதாவது மேதே சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேதே சமூகம் என்பது மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் சமூகமாகும். இந்நிலையில் தான் அந்த சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற அங்கு ஆளும் பாஜகவின் முதல்வர் பீரன் சிங் தலைமையிலான அரசு முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மேதே சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கடந்த புதன்கிழமை அனைத்து பழங்குடியினர் மாணவர் அமைப்பினர் சார்பில் மேதே சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தின்போது இருதரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வீடுகள், கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது.
இதையடுத்து உடனடியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இண்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டன. வன்முறை பகுதிகளில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இருப்பினும் கூட பதற்றம் என்பது இன்னும் தணியவில்லை. இதையடுத்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் நிலவரம் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்தார். உடனடியாக மத்திய பாதுகாப்பு படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் மத்திய அரசு மணிப்பூரில் ஆர்ட்டிக்கிள் 355-யை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஆர்ட்டிக்கள் 355 என்பது அரசியலமைப்பு பிரிவின் 355வது பிரிவாகும். இந்த பிரிவு என்பது மத்திய அரசுக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது. அதாவது உள்நாட்டில் வன்முறைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசால் இந்த சட்டிப்பிரிவின் கீழ் எடுக்க முடியும். அதன்படி மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசியமைப்பின் சட்டப்பிரிவான 355-யை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
மேலும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை மேற்பார்வையிட உளவுத்துறை டேிஜிபி அசுதோஷ் சின்ஹாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளார். அதோடு முன்னாள் டிஜிபியான குல்தீப் சிங்கையும் அங்கு நியமனம் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஆர்பிஎப் எனும் அதிரடி படையினர், சிஆர்பிஎப், பிஎஸ்எப் உள்ளிட்ட மத்திய படை வீரர்கள் மணிப்பூரில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய சூழலில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையில் பகுதியில் இருந்து 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 600க்கும் அதிகமானவர்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து மக்கள் வெளியேற தொடங்கி உள்ளனர். இதனால் மணிப்பூர் நிலவரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
***