கோவா: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவராகவும், நியாயப்படுத்துபவராகவும் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நேற்று நிறைவடைந்தது. இதில் பயங்கரவாதத்திற்கு நிதி செல்லும் பாதை தடுக்கப்பட வேண்டும் என்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உறுப்பு நாடுகள் செயல்பட வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். பயங்கரவாதத்தை எதைக் கொண்டும் நியாயப்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்துப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஒரு நாட்டை குற்றம் சொல்வதற்காக பயங்கரவாதம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் நோக்கில் அவரது இந்த பேச்சு அமைந்ததாக இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவராக, நியாயப்படுத்துபவராக, அதன் செய்தித் தொடர்பாளராக பிலாவல் பூட்டோ சர்தாரி இருப்பதாக விமர்சித்தார்.
சீன வெளியுறவு அமைச்சர் கின் காங், ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அந்நாடு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி நிலையானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், “பிரச்சினை அது அல்ல. எல்லையில் இரு நாடுகளும் படை விலக்கலை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில், இந்திய – சீன உறவு சீராக இல்லை. அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள் உள்ளபோது உறவு சீராக இருக்க முடியாது” என பதிலளித்தார்.