2 ஆண்டுகாலம் நிறைவு:
திமுக ஆட்சிக்கு வந்து வரும் 7-ம் தேதியுடன் 2 ஆண்டுகாலம் நிறைவு பெறுகிறது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. முன்னதாக இதுகுறித்து கடந்த மார்ச் 1-ம் தேதி நடத்த தனது 70-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர், “2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதற்கான தேர்தல் அது. ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தும் பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்.
ஒற்றுமைதான் காரணம்:
அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே பாஜகவை வீழ்த்தியதாக சொல்லிவிடலாம். மாநிலங்களுக்கு இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு ஒற்றுமைதான் காரணம்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் மறுபுறம், “திமுக நடத்துவது கூட்டணி ஆட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் தனியாக தான் ஆட்சி செய்கிறார்கள்” என்கிறார்கள், அதன் கூட்டணி கட்சிகள். திமுக கூட்டணியில் என்னதான் நடக்கிறது?
`மின்சாரத்தில் தினமும் ஒரு உத்தரவு’
நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். “கொரோனா பாதிப்பு, மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவது பாராட்டுதலுக்குரியது. மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், பெண்களுக்கு உரிமை தொகை போன்ற திட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை.
அதேசமயத்தில் மின்சார கட்டணத்தில் தினமும் ஒரு உத்தரவு போடுகிறார்கள். அதாவது கட்டணம் உயர்வு, பல இணைப்பு வைத்திருந்தால், அதை ஒன்றாக மாற்றுவது. அனுமதி பெற்ற அளவை விட கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தினால் அதற்கு அபராதம் விதித்தல் போன்றவையாகும். இந்த போக்கு மக்கள் மத்தியில் கசப்பை உருவாக்கியிருக்கிறது.
`ஆட்சியை திமுக தான் வைத்திருக்கிறது’
சொத்து வரி உயர்த்தியது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் 6% உயரும் என்பது மிகவும் மோசமானது. அரசு வேலைகளில் நிரந்தர பணி என்பது இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் இருக்கும் தூய்மை பணி உள்ளிட்டவற்றை ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவது என்பது ஏற்புடையது இல்லை. எனவே கூடுதல் பணியிடங்களை உருவாக்கி நிரந்தர பணிகளை வழங்க வேண்டும்.
திடீரென திருமண மண்டபங்களில் மது விநியோகிக்க போகிறோம், 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதா போன்றவை தேவையில்லாத விஷயம். இது அரசுக்கு கெட்டபெயரை உருவாக்கிருக்கிறது. அரசியல் ரீதியாக திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் ஆட்சியை திமுக தான் வைத்திருக்கிறார்கள்.
“பாஜக வந்துவிடக்கூடாது…”
தமிழகத்தில் பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்கு திமுக கூட்டணியில் இருக்கிறோம். மத்திய அரசு அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பல்வேறு இழுத்தடிப்பு வேலைகளை செய்கிறது. ஆளுநர் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு நிறைவேற்றப்படும் மசோதக்களை கிடப்பில் வைத்திருக்கிறார்.
இப்படியான மத்திய அரசின் மோசமான போக்கு, மதவெறி அரசியல், இந்தி திணிப்பு போன்ற மொழி உரிமை பறிப்பு, ஒற்றை தன்மையை இந்தியாவில் திணிக்க முயற்சி செய்வது போன்றவற்றை எதிர்த்து தமிழகத்தில் வலுவான கூட்டணி இருக்கிறது. அது தொடரும்” என்றார்.
“போர்க்கால அடிப்படையில்…”
காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, “திமுக பொறுப்பேற்ற போது 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் இருந்தது. பொதுத்துறை நிறுவனங்களும் கடனில் இருந்தது. இருந்தபோதும் பதவியேற்ற அன்றே 5 திட்டங்களில் முதல்வர் கையெழுத்திட்டார்.
கொரோனா தொற்றும், பலியும் அதிகமாக இருந்தபோது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வினால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. மின்துறையில் 14 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
“செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக…”
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1.50 லட்சம் பேருக்கு இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். மகளிருக்கு இலவச பேருந்து திட்டம், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 போன்றவை மிக முக்கியமானவை. ஆளுநருக்கு எதிராக போராடி வருகிறார்கள். 2 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றி இருக்கிறார்கள்.
இருப்பினும் செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது. பல இடங்களில் சாலை வசதி மிகவும் மோசமாக இருக்கிறது. பேருந்துகள் போதுமான அளவுக்கு இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம், நிதி ஒதுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை மிகவும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிக்க வேண்டும்” என்றார்.
“கூட்டணி ஆட்சி என்று சொல்ல முடியாது…”
விசிக துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னா, “இதை கூட்டணி ஆட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் தனியாக தான் ஆட்சி செய்கிறார்கள். கடன் சுமையை குறைத்தது பெரிய விஷயம் தான். மத்திய அரசின் ஒத்துழைப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் நிறைய நலத்திட்டங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
பெண்களுக்கு உரிமை தொகை கொடுப்பது போன்ற விஷயங்கள் தள்ளி போவதை பார்க்க முடிகிறது. பள்ளி கல்வித்துறையில் தடுமாற்றம் இருக்கிறது. பொறியியல் கல்லூரிகள் நிறைய மூடப்பட்டு வருகிறது. அதை சீர்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து வந்து படிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“ஆதரவால் தான் வெற்றி…”
நிர்வாக அளவில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு என்று இருந்த தனித்தன்மை போய்விட்டது. அதை மீட்டெடுக்க வேண்டிய நிலை திமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை திராவிட மாடல் என்ற கூறி மீட்டெடுத்து வருகிறார்கள். இது ஒரு புதுவகையான நடவடிக்கை தான்.
தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தான் வெற்றி கிடைத்தது. ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் அரசு நிர்வாகத்தில் கிடைக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல், அரசு அதிகாரத்தை நோக்கி தான் பயணிக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் இருக்கும். அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
“சில சறுக்கல்கள் இருக்கிறது…”
தவாக தலைவர் வேல்முருகன், “முதல்வர் நல்ல ஆட்சி, நிர்வாகத்தை வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மத்திய அரசு, ஆளுநர், சில அதிகாரிகள் தலையீடுகளின் காரணமாக தடங்கல்கள் ஏற்படுகிறது.
12 மணிநேர வேலை மசோதா, திருமண மண்டபங்களில் மது விற்பனை, 100 ஏக்கருக்கு மேல் இருக்கும் நீர்நிலைகளை தேவைப்பட்டால் பெரு நிறுவனங்களுக்கு வழங்கலாம் என பரந்தூர் விமான நிலையத்துக்காக சட்டம் கொண்டுவந்தார்கள். இது சமூக ஆர்வலர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோல் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில சறுக்கல்கள் இருக்கிறது.
களையெடுக்க வேண்டும்:
பெண்களுக்கு ரூ.1,000 உடனே வழங்க முடியாது என்று சொன்னபோதும், அதுகுறித்து அறிவிக்கப்பட்டது. அரசு கடனில் இருந்தாலும் உங்கள் தொகுதியில் முதல்வர், இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் போன்றவை பாராட்டுதலுக்குரியவை. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் தான் ஆட்சி செய்து வந்தார்கள். இன்னும் ஒருசில இடங்களில் தொடர்கிறது.
முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும். களையெடுக்க வேண்டிய அதிகாரிகள் எவ்வளவு பெரிய செல்வாக்கில் இருந்தாலும் தூக்கியெறியப்பட வேண்டும். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூட்டணி கட்சிகளை அழைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்த வேண்டும்” என்றார்.