தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குழிகள் திறக்கப்படுகின்றன. அவற்றில் 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 11 மணல் குழிகள் திறக்கப்படுகின்றன. இவ்வளவு மணல் குழிகள் திறக்கப்படுவதும், அதில் எல்லையில்லாத அளவுக்கு மணல் அள்ளப்படுவதும் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் சரி செய்யவே முடியாத அளவுக்கு கேட்டை ஏற்படுத்தி விடும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொள்ளிடம் ஆற்றின் முதல் மணல் குழி அமைக்கப்படும் திருச்சி மாவட்டம் மாதவபெருமாள் கோயிலுக்கும், கடைசி மணல் குழி அமைக்கப்படும் மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூருக்கும் இடைப்பட்ட தொலைவு 87 கி.மீ மட்டும் தான். அதற்குள்ளாக 11 மணல் குழிகள் அமைக்கப்படுகின்றன. அதாவது சராசரியாக 7.90 கி.மீ தொலைவுக்கு ஒரு மணல் குழி அமைக்கப்படுகிறது.
கொள்ளிடம் உள்ளிட்ட அனைத்து ஆறுகளின் பாசனப் பகுதிகளிலும் நீர்வளத்தைப் பெருக்க 10 கிமீக்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்யாத அரசு, அதற்கு நேர் எதிராக 7.90 கிமீக்கு ஒரு மணல் குழியை அமைக்கிறது. இது இயற்கை மீது நடத்தப்படும் தாக்குதல்.
கொள்ளிடம் ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டுக்கடங்காமல் நடத்தப்பட்டு வரும் மணல் கொள்ளையால் அளக்குடியில் தொடங்கி 22 கி.மீ தொலைவுக்கு கடல் நீர் உட்புகுந்துள்ளது. அதைத் தடுக்க அளக்குடியில் கடைமடை கட்டமைப்புச் சுவர் கட்ட வேண்டும்; மாதிரிவேளூரில் கதவணை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கதவணை கட்டப்பட வேண்டிய மாதிரிவேளூரில் 89,749 அலகும், அதற்கு அருகில் வடரங்கத்தில் 98,715 அலகும் மணல் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 இடங்களில் மணல் குழிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் அனுமதிக்கப் பட்டதை விட பலமடங்கு மணல் அள்ளப்படும். இது கொள்ளிடத்தை கொள்ளையடிக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் மணல் குழிகள் அமைக்கப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அளவுக்கு அதிகமாகவும், சட்டவிரோதமாகவும் மணல் கொள்ளையடிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் பட்டியலிட முடியாத அளவுக்கு நீளமானவையாகும். மணல் கொள்ளை நடைபெறும் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
கடலூர் – மயிலாடுதுறை மாவட்டங்களில் கடலை ஒட்டிய 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதன் பிறகும் மணல் கொள்ளை தொடர்ந்தால், அதனால் ஏற்படும் பெரும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசே நினைத்தாலும் தடுக்க முடியாது.
கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் கொள்ளையை நியாயப்படுத்த முடியாது. கேரளத்தில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது; கர்நாடகத்தில் மணல் அள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அந்த மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தடைபடாமல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதுமட்டுமின்றி, ஆற்று மணலுக்கு ஏராளமான மாற்றுகளும் வந்து விட்டன. தமிழ்நாடு அரசும் நினைத்தால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்யலாம்.
ஆறுகள் எனப்படுபவை இயற்கை அன்னை நமக்கு கொடுத்த கொடை; அவை வரம். அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். மணல் குழிகள் என்ற பெயரில் ஆறுகளைச் சுரண்டி வரத்தை சாபமாக்கி விடக் கூடாது. மதுவைப் போலவே மணல் குழிகளும் அழிவு சக்திகள் தான்.
அதனால் கிடைக்கும் வருவாயை விட, ஏற்படும் இழப்புகள் பல மடங்கு அதிகம். செயற்கை மணல், இறக்குமதி மணல் என ஏராளமான மாற்று வழிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஆறுகளை ஓட்டையிட்டுக் கொண்டிருக்கக்கூடாது. மணலுக்கான மாற்று வழிகளை பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ள மணல் குழிகளை உடனடியாக மூட அரசு முன் வர வேண்டும்” என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.