வரலாற்றில் மிக சொற்பமான அரசுகளே மக்கள் பக்கம் நின்று, மக்களுக்கான ஆட்சியை வழங்கியுள்ளன. இல்லையென்றால் வரலாற்று புத்தகத்தின் அத்தனை பக்கங்களிலும் இவ்வளவு ரத்தங்கள் இருந்திருக்காது. கோட்டைகளின் சுவர்கள் கடினமாக அமைக்கப்பட்டதே மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் சற்று விலகியிருக்கத்தான் என்னவோ! ஆனால் எல்லா காலகட்டத்திலும் விதி விலக்குகளாக ஒரு சில நல்ல ஆட்சியாளர்களும் இருந்திருக்கிறார்கள். அதனால் தான் பூமிப்பந்து களைப்படையாமல் சுழன்று வருகிறது. அவ்வாறு இந்த காலகட்டத்துக்கான விதிவிலக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை கை காட்டலாம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர்
தலைமையில் ஆட்சியமைந்ததிலிருந்தே தமிழ்நாடு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புதிய அரசியலை பார்க்கத் தொடங்கியது. மக்களின் முகங்களைப் பார்த்து அவர்களின் தேவைகளை அறிந்து திட்டங்கள் தீட்டப்படுகின்றன. தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் பெட்டி பெட்டியாக புகார்கள் பெறப்பட்டன.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
ஆட்சிக்கு வந்ததும் அந்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க தனி ஐஏஎஸ் அதிகாரியையே நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். முதலமைச்சர் தனிப் பிரிவில் பெறப்படும் கோரிக்கைகள் உடனடியாக செயல் வடிவம் பெறுகின்றன. முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அவரிடம் மனு கொடுப்பதற்காக காத்திருக்கும் மக்களிடம் பொறுமையாக அதைப் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார்.
கள ஆய்வில் முதலமைச்சர்
தான் ஒருவர் மட்டும் அல்லாமல் அரசு இயந்திரத்தின் அத்தனை மட்டங்களில் இருப்பவர்களும் இதே எண்ணத்தில் மக்களின் குறைகளை கேட்கவும் அதை உடனடியாக களையவும் அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும் தனது செயலால் தூண்டுகிறார் முதல்வர். அதுமட்டுமல்லாமல் இந்த பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதை அறிய அவ்வப்போது ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் மூலம் பயணம் மேற்கொள்கிறார்.
உங்களில் ஒருவன்!
கனமழை, வெள்ளம் என எந்த இடர்பாடு வந்தாலும் ஒரு பக்கம் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஊக்கம் அளித்து வேலை வாங்குவது, மற்றொரு புறம் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று துயர் துடைப்பது இந்த இரண்டையும் ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருகிறார். வார் ரூம்கள் அமைக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகள் உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படுகின்றன.
மக்களை பின் தொடர்ந்து செல்லுதல்!
பத்திரிக்கைகள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் வெளிவரும் எந்த பிரச்சினைக்கும் உடனடியாக செவி கொடுத்து அதை தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கிறார். நரிக்குறவ பெண் ஒருவருக்கு ஒரு அநீதி என்று கேள்விபட்ட உடன் அவரது வீட்டுக்கு சென்று துயர் துடைக்கிறார். எந்த கோரிக்கையும் பெறாமலே அவர்கள் முகமறிந்து நலத்திட்ட உதவிகளை செய்கிறார். இதை தான் மட்டுமல்லாமல் அமைச்சர்களை, மக்கள் பிரதிநிதிகளை, அதிகாரிகளை இதேபோல் செய்யத் தூண்டுகிறார். அந்த இடத்தில் மக்கள் அணுகும் இடத்தில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதை ஒரு கலாச்சாரமாக மாற்றுகிறார்.
அரசியல் வானில் அரிய நட்சத்திரம்!
தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காக 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை தமிழக அரசு கொண்டுவந்தது. அதற்கு தொழிற்சங்கங்கள், பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே மக்கள் முடிவுக்கு மதிப்பளித்து எந்த வறட்டு பிடிவாதமும் பிடிக்காமல் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற்றது மிக முக்கியமானது. மக்களே எஜமானர்கள், இறுதி முடிவு என்பது மக்களிடம் இருந்து தான் வரவேண்டும் என்று அதிகாரத்தை அவர்களிடம் அளித்து ஒதுங்கி நிற்கும் பண்பு அரசியலில் அரிதானது.