சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி செயல்பாடுகள் குறித்த அறிக்கையை புத்தகமாக தயாரித்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினிடம் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையாக இன்னும் ஓராண்டு கூட இல்லாததாலும், தேர்தல் 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்பதாலும் ரிப்போர்ட் புக் தயாரிக்கும் பணிகளில் திமுக எம்.பி.க்கள் மும்முரம் காட்டுகின்றனர்.
திமுக மக்களவை எம்.பி.க்களில் தருமபுரி செந்தில்குமார், வடசென்னை கலாநிதி வீராசாமி, தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூன்று பேரும் தங்கள் தொகுதியில் தாங்கள் இன்னன்ன பணிகள் செய்திருக்கிறோம், இன்னன்ன பணிகள் செய்ய முடியவில்லை, அதற்கான காரணம் எனக் கூறி ரிப்போர்ட் புத்தகத்தை அவ்வப்போது ஸ்டாலினிடம் வழங்கி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனோ அவ்வளவாக அக்கறை காட்டாமல் இருந்து வந்தனர். இதனிடையே தேர்தல் நெருங்கி வருவதால் அவர்களும் தங்கள் தொகுதிப் பணிகளை பட்டியலிடும் பணிகளில் இறங்கியுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு தொகுதி வாரியாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் செயல்பாடு குறித்த அறிக்கையை புத்தகமாக ஸ்டாலினிடம் வழங்குவார்கள் எனத் தெரிகிறது.
கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் இரண்டு ஆண்டுகாலம் தொகுதிக்கு எம்.பி. என்ற முறையில் தங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பது பெரும்பாலான எம்.பி.க்களின் ஆதங்கமாக உள்ளது.
எம்.பி.க்கள் என்னதான் தன்னிடம் ரிப்போர்ட் புக் கொடுத்தாலும் ஒவ்வொரு எம்.பி.யின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை பற்றிய ரிப்போர்ட்டை ஏற்கனவே உளவுத்துறை மூலம் அறிந்து வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதனிடையே செயல்பாடுகள் அடிப்படையில் பார்த்தால் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி உட்பட 7 எம்.பி.க்கள் ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பிடித்திருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.