கைகளைக் கழுவுவது நம்மைப் பல நோய்களில் இருந்தும் விலக்கி வைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை நமக்குக் கற்பிக்கப்பட்ட கை கழுவும் முறை சரிதானா… இந்தக் கேள்விக்கு விடை தேடும் வகையில், ஹங்கேரியில் உள்ள டாபெஸ்டின் செம்மல்வீஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஒபுடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து பதிலளித்துள்ளது.
இதற்காக 340-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு, வணிக ரீதியாகக் கிடைக்கும் 1.5 மி.லி மற்றும் 3 மி.லி ஆல்கஹால் ஹேண்ட் சானிட்டைசர்கள், ஜெல் மற்றும் திரவ வடிவில் கொடுக்கப்பட்டன.
முதலில் திரவ ஹேண்ட் சானிட்டைசர்… அடுத்து ஜெல் ஹேண்ட் சானிட்டைசர் என மாணவர்கள் இந்த இரண்டு அளவுகளையும் இரண்டு முறை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.
அதில், 1.5 மி.லி அளவுள்ள ஜெல் சானிட்டைசர் சராசரியாக 7 சதவிகிதம் கைகளைச் சுத்தம் செய்யாமல் விட்டது. திரவ சானிட்டைசர் 5.8 சதவிகிதம் சுத்தம் செய்யவில்லை. இதற்கு மாறாக 3 மி.லி அளவுள்ள ஜெல் மற்றும் திரவநிலையில் உள்ள ஹேண்ட் சானிட்டைசர் கைகளை நன்றாகச் சுத்திகரித்ததைக் கண்டறிந்தனர்.
அதுமட்டுமல்லாமல் கைகளைச் சுத்தம் செய்யும்போது பெரும்பாலும் விரல் நுனிகள் மற்றும் அதிகம் பயன்படுத்தும் கையின் (Dominant Hand) பின்புறம் சுத்தம் செய்யப்படாமல் விடப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஆய்வு முடிவுகள்:
* உங்கள் கைகளைக் கழுவுவதற்கான சரியான வழி, உங்கள் விரல் நுனிகளைச் சுத்தம் செய்வது.
* கைகளை கிருமி நீக்கம் செய்ய பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர்களின் அளவு போதாது. 1.5 மி.லி அளவு ஹேண்ட் சானிட்டைசர் சிறிய கைகளுக்குக் கூட போதாது.
* சராசரி கை அளவுள்ளவர்களுக்கு, 3 மி.லி பொதுவாக போதுமானது; ஆனால், பெரிய கைகளுக்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படலாம்.
* அதுவே 3 மி.லிஅளவானது ஒரு சிறிய கைக்கு அதிகமாகத் தெரியலாம் மற்றும் வீணாகவும் செய்யலாம். 3 மி.லி ஹேண்ட் சானிட்டைசரை சராசரியாக கைகளில் தேய்க்கும் நேரம் 40 முதல் 42 விநாடிகள்.
* அதாவது ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனை நோய்த் தொற்றுகளால் தங்களது வாழ்வை இழக்கின்றனர். அதே போல சர்வதேச கை கழுவும் வழி காட்டுதல்களும் போதுமான அளவில் இல்லை.
* மருத்துவமனையில் இருந்து ஏற்படும் நோய்த்தொற்றுகளில் 40 சதவிகிதம் நேரடித் தொடர்பின் விளைவாக நிகழ்கிறது. முக்கியமாக, கை சுகாதாரமின்மை போதுமான அளவு இல்லாததன் காரணமாகவும் இது நிகழ்கிறது. இதில் தோராயமாக 10 சதவிகிதம் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது.
எனவே… சரியான முறையில் கைகழுவி நோய் ஏற்படாமல் காத்துக் கொள்வோம்!