சென்னை: மாஜி அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.. துயரத்தில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள முடியவில்லை.. பிரிந்து சென்ற கருப்பு கொம்பனை நினைத்து நினைத்து உருகி கொண்டிருக்கிறார்..!!
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், காளைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர், பல காளைகளை ஆசையுடன் வளர்த்து வருகிறார்.
இந்த காளை வளர்ப்பில் தனிக்கவனம் செலுத்துவதோடு, அதனை பராமரிக்க ஸ்பெஷலாக பணியாட்களை நியமித்துள்ளார்.. அந்த காளைகளுடன் அவ்வப்போது பாசத்துடன் பழகியும் வருகிறார்.
இந்த காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அந்த வகையில் சிறப்பு பயிற்சியும் அளித்திருக்கிறார்.. பல போட்டிகளில் இந்த காளைகள் பரிசுகளை அள்ளி வந்துள்ளன.. இதில் கருப்புக் கொம்பன் என்ற காளையும் ஒன்று..
தடுப்புக்கட்டை: இந்நிலையில், கடந்த 2ம் தேதி அன்னவாசல் ஒன்றியம் வடசேரிபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கருப்புக் கொம்பன் காளையும் களமிறங்கியது. அப்போது திடீரென தடுப்புக் கட்டையில் மிக பலமாக மோதி அங்கேயே சுருண்டு விழுந்தது. இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பாகிவிட்டது.. தன்னுடைய காளை சீறிப்பாய்ந்து செல்வதை நேரில் காண்பதற்காக, விளையாட்டு பகுதிக்கு விஜயபாஸ்கர் நேரடியாகவே வந்திருந்தார்.. அப்போது காளை அடிபட்டு விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மயங்கி கிடந்த காளையின் தலையில் தன்னுடைய கை வைத்து தடவிக்கொடுத்தார்..
பிறகு, கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோதே, சொந்த ஊரில் இருந்து 2 முறை இந்த காளையை பார்க்க ஒரத்தநாடு சென்றுவந்தார். சிகிச்சையை டாக்டர்களிடம் தினமும் போனை போட்டு விசாரித்து கொண்டேயிருந்தார்.. ஆனால், உயர்சிகிச்சை தரப்பட்டும்கூட, பலனின்றி கருப்பு கொம்பன் காளை உயிரிழந்து விட்டது..
விஜயபாஸ்கர் சோகம்: காளை எப்படியும் வீட்டுக்கு வந்துவிடும் என்று பெருத்த நம்பிக்கையில் இருந்த விஜயபாஸ்கருக்கு, இந்த இழப்பானது அதிக மனவருத்தத்தை தந்தது.. இந்த கொம்பன் காளையை, மிகவும் செல்லமாக வளர்த்து வந்திருக்கிறார்.. ஒரு குழந்தையை போல இந்த காளையை வளர்த்து வந்தாராம்.. இப்படித்தான், சில வருடங்களுக்கு முன்பு, இதேபோல ஒரு கொம்பன் காளை, இதேபோல வாடிவாசலில் இருந்து வேகமாக வெளியே வந்தபோது, மரத்தில் மோதி இறந்துவிட்டது..
அந்த காளையை தன்னுடைய தோட்டத்திலேயே புதைத்து, அதற்கு தனியாக ஒரு சமாதியும் அமைத்து, தினமும் வழிபட்டும் வருகிறார் விஜயபாஸ்கர்.. இதற்கு பிறகு, கடந்த 2021-ல் வெள்ளைக் கொம்பன் என்ற காளை வயது மூப்பு காரணமாக இறந்துவிட்டது. அந்த காளையையும் ஊர்வலமாக எடுத்து சென்று, இறுதி சடங்குகள் நடத்தி, தன்னுடைய தோட்டத்திலேயே புதைத்து வழிபட்டு வருகிறார்.. இப்போது இன்னொரு கருப்பு கொம்பன் காளையும் இறந்துவிட்டது..
மீளா துயரம்: இந்த காளைக்கும், விஜயபாஸ்கர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.. இதையும் தன்னுடைய இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்தார் விஜயபாஸ்கர்.. எனினும், காளையின் மரண அதிர்ச்சியில் இருந்து விஜயபாஸ்கர் இன்னும் மீளவேயில்லை. தன்னைவிட்டு பிரிந்து சென்ற கருப்பு கொம்பனை நினைத்து உருகி உருகி ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த கலங்கடிக்கும் வரிகள்தான் இவை:
சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் இருந்தபோது, திருவப்பூர் ஜல்லிக்கட்டில் #கருப்பு_கொம்பன் காணாமல் போன செய்தி இடியாய் இறங்கியது. கிட்டதட்ட 2 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்னர் இல்லம் வந்துசேர்ந்தான்.
இல்லம் வந்து சேர்ந்தவனை
மீண்டும் இழந்து தவிப்போம் என
ஒரு கணம்கூட எண்ணியதில்லை.
தமிழ்நாட்டில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலை நெஞ்சுரத்தோடு சந்தித்தவன்
என் கருப்பு கொம்பன்.
கண் இமைக்கும் நொடிகளில் சீறிப்பாய்ந்து
கால் பதித்த களத்தில் எல்லாம்
வெற்றிக்கொடி நாட்டியவன்.
அனல் பறக்கும் வேகத்தில்
சுற்றிச் சுழன்றாலும்,
இல்லம் வந்து விட்டால்
சுட்டிக் குழந்தையாய் மாறி விடுவான்.
மண் பேசும் பெருமைகளையும்,
எண்ணிலடங்கா பரிசுகளையும்,
அள்ளிக் குவித்த கருப்பு கொம்பன்,
சில தினங்களுக்கு முன்பு வடசேரிப்பட்டி வாடிவாசலில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டான்.
தமிழ்நாட்டின் வாடிவாசல்களில் எல்லாம்
பம்பரம் போல் சுற்றிச் சுழன்ற
என் கருப்பு கொம்பன்
இன்று அதிகாலை
தன் பயணத்தை முடித்துக் கொண்டான்.
வாடிவாசல்
உன் வருகைக்கு
கண்கள் குவித்து காத்திருக்கிறது…
நாங்கள்
இதயம் கலங்கி தவிக்கின்றோம்…
எம் கருப்பு கொம்பா…
சென்று வா…
மீளாத்துயரில்..