பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாப் பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தையும் அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாககக் கூறப்படுகிறது.
அரசுப் பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. டிஎன்பிஎஸ்சியை இரண்டாகப் பிரிக்கவும், சார்பு நிலை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசின் எஸ்எஸ்சி போன்ற இன்னொரு தேர்வு வாரியத்தை அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து முடிவு எடுப்பதற்காக கலந்தாய்வுக் கூட்டம் வரும் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணிக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஆணையம் அனைத்து வகையான ஐயங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
அதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். புதிய தேர்வு வாரியம் அமைக்கம் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.