கார்கேவுக்கு கொலை மிரட்டல்: காங். புகார் மீதான விசாரணைக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைக் கொலை செய்ய பாஜக சதி செய்ததாக காங்கிரஸ் கூறி இருப்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், மல்லிகார்ஜுன கார்கேவை அவதூறான வார்த்தைகளில் திட்டி அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என்று பேசும் ஆடியோவை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அவரது மனைவி, குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக கூறுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி பேசியவர் சாதாரணமானவரும் இல்லை. அவர் வேறு யாரும் இல்லை, பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் பொம்மையின் செல்லப்பிள்ளையான சித்தாப்பூர் பாஜக வேட்பாளரே தான். இந்த விவகாரத்தில் பிரதமர் அமைதியாகவே இருப்பார். கர்நாடக போலீஸும், தேர்தல் ஆணையமும் மவுனமாகவே இருக்கும். ஆனால் கர்நாடக மக்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை. அவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

சித்தாபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவை எதிர்த்து பாஜக சார்பில் களமிறங்குகிறார் மணிகண்ட ரதோட். சர்ச்சைக்குரிய வேட்பாளரான இவர் மீது 30-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. பிரியங்க் கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறோம். இதில் அடங்கி இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். சட்டம் தன் கடமையைச் செய்யும்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.