சென்னை: “சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் மூலம் பெறப்பட்ட 672 விண்ணப்பங்களில், 327 விண்ணப்பங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2 மாதங்களில் மட்டும், 130 திட்ட அனுமதிகள் வழங்கப்பட்டது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான கே.சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், கட்டிடங்களுக்கான இணைய வழி திட்ட அனுமதி முறையை செயல்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒற்றை சாளர முறை அடிப்படையில் இணைய வழி (Single Window Clearance system) திட்ட அனுமதி மென்பொருளை உருவாக்கி, மே மாதம் 2022ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது திட்ட அனுமதி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது முதல், திட்ட அனுமதி வழங்கும் வரை, முற்றிலுமாக இணைய வழியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற துறைகளின் தடையின்மை சான்றுகளை பெறுவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைய வழி மூலம் ஒருங்கிணைப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநர்கள், கட்டிடப் பொறியாளர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்கள் ஆகியோர்களுக்கு இணையதள திட்ட அனுமதி விண்ணப்பம் சமர்ப்பிப்பது, கையாளுவது சம்பந்தமாக மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மூலம் பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட பல்வேறு நேர்முக பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த ஒற்றைச் சாளர மென்பொருள் (Single Window Clearance system)கடந்த 2022ஆம் ஆண்டு, மே மாதம் முதல் இதுவரை இணையதளத்தில் திட்ட அனுமதி வழங்குவதில் 82 சதவீதமாக துரித வளர்ச்சி கண்டுள்ளது.சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் மூலம் பெறப்பட்ட 672 விண்ணப்பங்களில், 327 விண்ணப்பங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2 மாதங்களில் மட்டும், 130 திட்ட அனுமதிகள் வழங்கப்பட்டது.மேலும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில், 63 விண்ணப்பங்களுக்கு, 60 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டது, விண்ணப்பதாரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது” என்று அவர் கூறினார்.