மோடியின் ‘ரோடு ஷோ’: `40 சதவீதம் ஊழல் Vs 85 சதவீதம் ஊழல்’ – பாஜகவின் புது ஆயுதம்!

கர்நாடகத்தில் வரும், 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸை வீழ்த்த, ‘மோடி அலையை’ உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் அதிதீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்தின் பல மாவட்டங்களில் பிரசாரம் செய்த நிலையில், பெங்களூரு நகரில், 38 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருந்தனர்.

பிரதமரின் ‘ரோடு ஷோ’

அதன்படி, இன்று மதியம் முதல் மாலை வரையில், பெங்களூர் நகரின் பல்வேறு இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி ‘ரோடு ஷோ’ சென்று வாக்கு சேகரித்தார். பெங்களூரில் ‘ரோடு ஷோ’ வருவதற்கு முன்பாக, இன்று காலை, பகால்கோட் மாவட்டத்தின் பதாமியில் வாக்கு சேகரித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி.

காங்கிரஸ் 85 சதவீத ஊழல்…

இன்றைய பயணத்தின் கடைசியாக, இரவு ஹாவேரி மாவட்டத்தில் வாக்கு சேகரித்து பேசிய அவர், ‘‘கர்நாடகா மாநிலம் முழுவதிலும் காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள், ’85 சதவீதம் கமிஷன் பெற்று ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸார் இங்குள்ள விவசாயிகளையும் விட்டுவைக்கவில்லை. பல விவசாயிகள் காங்கிரஸின், ’85 சதவீத கமிஷன்’ ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் இங்கு யூரியா உரத்தில் மாபெரும் ஊழல் செய்துள்ளனர்.

ஆனால், பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. சர்வதேச சந்தையில், ஒரு கிலோ யூரியா உரத்தின் விலை ரூ. 50 ரூபாய். ஆனால், நமது நாட்டில் விவசாயிகள் ஒரு கிலோ யூரியாவை வெறும் 5 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். யூரியாவின் விலையை குறைப்பதற்காக, பா.ஜ.க அரசு, ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரை வரவேற்ற மக்கள்.

பா.ஜ.கவின் ‘டபுள் இன்ஜின்’ அரசாங்கம் தான், கர்நாடகாவில் காங்கிரஸின் ஊழல்களை தடுத்து, நல்லாட்சியை வழங்கி வருகிறது. காங்கிரஸ் அவர்களின் பழைய பழக்கமான, சமாதான அரசியல், வாக்கு வங்கி அரசியல், பிரித்தாளும் அரசியலையும், பா.ஜ.க கொண்டு வந்த நல்ல திட்டங்களை நிறுத்துவதையும் ஒரு போதும் நிறுத்த மாட்டார்கள். காங்கிரஸ் என்றால், 85 சதவீத ஊழல் மட்டும் தான்,’’ என, காட்மாகப் பேசியுள்ளார்.

‘பா.ஜ.க 40 சதவீத ஊழல் ஆட்சி‘ என்ற, காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, ‘காங்கிரஸ் 85 சதவீத ஊழல் ஆட்சி’ என, புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது. மேலும், ’40 சதவீதம் ஊழல்’ Vs ’85 சதவீதம் ஊழல்’ என்ற புதிய வார்த்தைப்போர் உருவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.