திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்து நாளை 3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ள நிலையில் கடந்தாண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் மூலம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் உட்கட்சி பூசல் காரணமாக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகராட்சியில் திமுக மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே முரண்பாடு நீடித்து வருகிறது. நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 6வது வார்டில் வெற்றி பெற்ற சரவணன் மேயர் ஆகவும் 1வது வார்டில் வெற்றி பெற்ற ராஜு துணை மேயர் ஆகவும் இருந்து வருகின்றனர். மேயரின் நடவடிக்கையை ரசிக்காத ஆணையர் அனைத்து பணிகளையும் தன்னிச்சையாக செயல்படுத்தி வருகிறார். ஆனால் திமுக கவுன்சிலர்கள் ஆணையருக்கு எதிராக மாமன்ற கூட்டத்தில் முழுக்கமிட்டனர்.
இந்த நிலையில் மேயர் சரவணன் ஆதரவாளராக இருந்த 7வது வார்டு பெண் கவுன்சிலர் இந்திரா தனது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத நிலையில் நெல்லை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் “ஏழாவது வார்டு மக்களை வஞ்சிக்கும் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு நன்றி! தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யாமல் இருப்பதற்கு நன்றி! சாலை வசதி செய்து தராமல் இருப்பதற்கு நன்றி!
சொந்த ஊரில் அகதிகளாக எந்தவித அடிப்படை தேவையும் இல்லாமல் எங்களை வாழ வைக்கும் எங்களுடைய எந்த ஒரு கோரிக்கைகளையும் எங்களின் கஷ்டங்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கும் மிக்க நன்றி.!” என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிவுற்று 3ம் ஆண்டில் எடுத்து அடி எடுத்து வைக்க உள்ள நிலையில் திமுக கவுன்சிலரின் இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.