மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை எம்எல்ஏ அலுவலகத்தில் தொகுதி மக்களுக்காக இ-சேவை மையத்தை தொடங்கி வைத்து, கட்டணம் முழுவதையும் தானே ஏற்று கொள்வதாக எம்எல்ஏ தமிழரசி அறிவித்துள்ளார்.
மானாமதுரையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர தனியார் பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒவ்வொரு சேவைக்கும் கட்டணமாக குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஏழைகள், விவசாயிகளுக்கு உதவும் வகையில் மானாமதுரை எம்எல்ஏ அலுவலகத்தில் எம்எல்ஏ தமிழரசி இ-சேவை மையத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ மதியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மையத்தில் ஜாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி மற்றும் சிறு, குறு விவசாயிகள் சான்று பெறுதல், ஓய்வூதியத் திட்டம், பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதற்கான செலவை தமிழரசி ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து எம்எல்ஏ தமிழரசி கூறியதாவது: தொகுதி மக்களுக்காக இலவச இ-சேவை மையத்தை தொடங்கியுள்ளோம். சேவை கட்டணம் முழுவதையும் நானே ஏற்று கொண்டுள்ளேன். மேலும் இங்கு விண்ணப்பித்து சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அதை உடனடியாக தீர்த்து வைப்போம். இதன்மூலம் மக்களுக்கு அரசின் சேவைகள் உடனுக்குடன் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.