சென்னை : திமுகவில் அதிகாரமிக்க புள்ளியாக விளங்கும் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சந்தித்துப் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. பாஜக தன்னைக் கைவிட்டு விட்டதால் திமுக பக்கம் ஓபிஎஸ் சாய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து விட்டது தேர்தல் ஆணையம். கடந்த சுமார் ஓராண்டாக நிலவி வந்த ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதலில் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகள் விசாரணை நடந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கை நாளுக்கு நாள் ஓங்கி, இப்போது ஓபிஎஸ்ஸை கிட்டத்தட்ட முழுமையாக ஓரங்கட்டி விட்டார் எடப்பாடி பழனிசாமி.
திமுக பி டீம் ஓபிஎஸ் : இதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு கைகொடுத்த முதல் அஸ்திரம், ஓ.பன்னீர்செல்வம் திமுகவோடு சாஃப்ட் ஆன அணுகுமுறையைக் கையாளக்கூடியவர் என்பதை வைத்து ஈபிஎஸ் தரப்பு அவரை திமுகவின் பி டீம் என கடுமையாக விமர்சித்தது தான். ஓபிஎஸ் மீதான எடப்பாடி பழனிசாமி கோஷ்டியின் இந்த விமர்சனம் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் வரை ஓபிஎஸ் மீது ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
ஈபிஎஸ் அணியின் குற்றச்சாட்டுக்கு ஏற்றார்போல், திமுக அரசை பலமுறை புகழ்ந்து பேசி இருக்கிறார் ஓபிஎஸ். தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த போதும், பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்த போதும் அதை வரவேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ் சாஃப்ட் டோன் : அதேபோல் சட்டமன்றத்திலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் புகழ்ந்து பேசினார் ஓபிஎஸ். இது அதிமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனெனில், எம்ஜிஆரை தலைவராக ஏற்று, அதிமுகவில் சேர்ந்தவர்கள் எப்போதும் கருணாநிதியை பொதுவெளியில் புகழ்ந்ததில்லை. ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுக்க கருணாநிதியை தீயசக்தி என விமர்சித்தவர்.
அப்படி இருக்கும்போது, அவரை ஓபிஎஸ் புகழ்ந்து பேசியது அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஓபிஎஸ்ஸின் மகனான அதிமுக எம்.பி ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியதோடு, திமுக ஆட்சியையும் பாராட்டினார்.
ஓபிஎஸ் – சபரீசன் சந்திப்பு : இதையெல்லாம் வைத்து திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என எடப்பாடி தரப்பு கடுமையாக விமர்சித்தது. இது அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் ஓரளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தியது. இன்று பெரும்பாலான நிர்வாகிகளும், தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருப்பது கண்கூடு.

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினின் மருமகன் சபரீசனை இன்று சந்துள்ளது அரசியல் அரங்கில் பேசு பொருளாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியை காண வந்தபோது இருவரும் சந்தித்து பேசிக் கொண்டுள்ளனர்.
பவுண்டரி அடிக்கலாம் : முன்னதாக, ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனது குழந்தைகளை அறிமுகப்படுத்திய சபரீசன் அதன் பிறகு அவருடன் தனிப்பட்ட முறையில் சிறிது நேரம் பேசியுள்ளார். சபரீசன் சி.எஸ்.கே ஜெர்சி, தொப்பி அணிந்தபடி ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தச் சந்திப்பின்போது, சி.எஸ்.கே – மும்பை அணி பற்றி ஓபிஎஸ்ஸிடம் பேசிய சபரீசன், சென்னை மைதானம் பவுண்டரிகள் அடிக்க சாதகமாக இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து, அதிமுக பற்றியும் விசாரித்துள்ளதாகவும், அதற்கு ஓபிஎஸ் கட்சி நிலைமை பற்றிச் சொன்னதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
மதில் மேல் பூனை : ஏற்கனவே ஓபிஎஸ் திமுகவின் ‘பி’ டீம் என்று அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில், பரபரப்பாக நடந்த கிரிக்கெட் போட்டிக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
அதிமுக தொடர்பான பிரதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஓபிஎஸ் திமுகவிடம் ஆதரவு கேட்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜக தன்னைக் கைவிட்டு விட்டதால் திமுக பக்கம் ஓபிஎஸ் சாய்கிறார் என்றும் எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஓபிஎஸ் திமுகவுடன் கூட்டு வைத்து செயல்படுவதாக தொடர்ந்து விமர்சித்து வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,’பூனைக்குட்டி வெளியே வந்தது.. சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல் சி.எஸ்க்.ஏ அணியின் கேப்டனாக தன்னை மாற்றுமாறு சிஎஸ்கே நிறுவனத்துடன் ஓபிஎஸ் சண்டையிட்டுக் கொண்டுள்ளார் எனவும் கலாய்த்துள்ளார் ஜெயக்குமார்.