மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்வேன் என்று சரத் பவார் அறிவித்துள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் தொடங்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவராக 24 ஆண்டுகள் சரத் பவார் நீடித்து வருகிறார். இந்த சூழலில் அவரது மகள் சுப்ரியா சுலே, அண்ணன் மகன் அஜித் பவார் இடையே மோதல் ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் 40 எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவில் இணைய இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. தேசியவாத காங்கிரஸ் உடைவதை தடுக்க சரத் பவார் முக்கிய முடிவை எடுத்தார். இதன்படி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 2-ம் தேதி அவர் அறிவித்தார்.
புதிய தலைவரை தேர்ந்தெடுக்க சுப்ரியா சுலே, அஜித் பவார் உட்பட 15 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மும்பையில் நேற்று காலை கூடி ஆலோசனை நடத்தியது. சரத் பவாரே கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று உயர்நிலைக் குழு ஒருமனதாக முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து மும்பையில் நேற்று மாலை சரத் பவார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற விரும்பினேன். ஆனால் மகாராஷ்டிர மக்கள், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் நான் ஓய்வு பெறுவதை விரும்பவில்லை. எனது முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எனது முடிவை கைவிட்டு தேசியவாத காங்கிரஸ் தலைவராக தொடர்வேன். அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வேன். கட்சியின் அடுத்த வாரிசு யார் என்பதை ஒரு நபரால் முடிவு செய்ய முடியாது. கட்சியில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
நிருபர்களின் சந்திப்பின்போது அஜித் பவார் உடன் இல்லை. அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் பவார் டெல்லி சென்றிருப்பதாகவும் அவரோடு சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்கள் வதந்தி என்று சரத் பவார் விளக்கம் அளித்தார்.