சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தைக் காண வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஐபிஎல் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய இந்தப் போட்டியில் முதலில் விளையாடி மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கி சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வெற்றிக்கொண்டது. இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதற்கான டிக்கெட் விற்பனையின் போது ரசிகர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது. அந்த அளவுக்கு போட்டியைக் காண பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் இருந்தனர்.
இதில் ரசிகர்கள் மட்டுமின்றி தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், லோகேஷ் கனகராஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்களும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இந்தப் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் கண்டு களித்தனர்.
இந்நிலையில், சென்னை – மும்பை போட்டியின்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சபரீசனும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டனர். இதில் சபரீசன் சிஎஸ்கே டி-ஷர்ட் அமர்ந்தபடி ஓபிஎஸ்ஸுடன் பேசும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “பூனைக்குட்டி வெளியே வந்தது” என கூறி ஓபிஎஸ் – சபரீசன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பூனைக்குட்டி வெளியே வந்தது…
சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு.. pic.twitter.com/MjDhDPKkpR