கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு.!
சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை புத்தா தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அதே பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மூத்த மகன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ள கோயிலில் மேளத்தாளம் முழங்க திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை கார்த்திக்கின் மகன் ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்துள்ளார்.
அந்த நேரத்தில், பெண் ஒருவர் திடீரென சாமி வந்து ஆடியுள்ளார். இதைப்பார்த்து பயந்து போன அந்த மாணவன் அருகில் இருந்த மின்சார பில்லர் பெட்டியில் கையை வைத்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் அந்த மாணவன் கீழே விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனை சார்பில் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையில், கோயில் நிர்வாகத்தினர் அனுமதியில்லாமல் மின்சார பில்லர் பெட்டியில் இருந்து மின்சாரம் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.