புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து ராணுவ வடக்குப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ரஜோரி செக்டாரில் உள்ள கண்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணு வத்தின் கூட்டு நடவடிக்கை மே 3-ம் தேதியன்று தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு ஒரு குகைக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை காலை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசினர்.
இதில், 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒரு மேலதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில், தீவிரவாதிகள் சிலர் இந்த தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும், ராணுவ நடவடிக்கை முடிந்த பிறகே அது குறித்த தகவல்கள் முழுமையாக தெரியவரும். சம்பவம் நடந்த இடத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஜோரி பகுதியில் மொபைல் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.