மணிப்பூரில் பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.
கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, புகலிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.வன்முறை மற்றும் பதற்ற சூழலால், இதுவரை அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டு மணிப்பூரில் சிக்கித் தவிப்பவர்களுக்காக மேற்கு வங்காள அரசு உதவி எண்ணை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூரிலிருந்து எங்களுக்கு வரும் செய்திகளால் மிகுந்த வேதனையடைகிறோம். இப்போது அங்கு சிக்கித் தவிக்கும் மணிப்பூர் மக்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன். வங்காள அரசு மக்களுக்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளது. மேலும் மணிப்பூர் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து அங்கு சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
துயரத்திலும் விரக்தியிலும் உள்ள மக்களுக்கு உதவ, முழு செயல்முறையையும் கண்காணிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்கள் எல்லா நேரங்களிலும் மக்களுடன் இருக்கிறோம். அனைவரையும் அமைதி காக்க வலியுறுத்துங்கள். உதவி தேடுபவர்கள் இந்த எண்களில் எங்களை தொடர்பு கொள்ளலாம். உதவி எண்கள்: 033-22143526, 033-22535185″ என்று கூறியுள்ளார்.