பாட்டி வடை சுட்ட கதை தான்
வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள, 'கஸ்டடி' படம் மே 12ல் வெளியாகிறது. இதில் நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, பிரேம்ஜி, சரத்குமார், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.
வெங்கட்பிரபு பேசுகையில், ''கதை எல்லாம் பெரிதாக இல்லைங்க. வழக்கமான பாட்டி வடை சுட்ட கதை தான். அதை எப்படி சுட்டார்கள் என்பதை வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளோம். எனக்கு முதல் தெலுங்கு படம், நாகசைதன்யாவுக்கு முதல் தமிழ் படம். வெங்கட்பிரபு என்றாலே ஜாலியாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு இப்படம் புதுஅனுபவமாக இருக்கும். என் படத்தில் இளையராஜா பெயர் வரவேண்டும் என்பது ஆசை. அது இதில் நிறைவேறியுள்ளது,'' என்றார்.
நாக சைதன்யா பேசுகையில், ''சென்னை சிட்டி என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இங்கு 'கஸ்டடி' பட முன்னோட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி. வெங்கட்பிரபு என்றாலே யுவன் இசை தான். ஆனால் இதில் இளையராஜாவும் இணைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. கீர்த்தியுடன் எனக்கு இரண்டாவது படம்,'' என்றார்.