சென்னை:
சாதி, மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்துபவர்களுக்கு திராவிட மாடல் புரியவே புரியாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடலை விமர்சித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மோடி நினைப்பதை செய்து முடிக்கும் B.L சந்தோஷ்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அண்மையில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், திமுக அரசின் அடையாளமாக பார்க்கப்படும் திராவிட மாடலை காலாவதியான மாடல் என்றும், தேசநலனுக்கு எதிரான மாடல் எனவும் கூறியிருந்தார்.
ஆளுநரின் இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராக பேசி வரும் ஆளுநரை ஜனாதிபதி திரும்பப்பெற வேண்டும் என திமுக தலைவர்களும், அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மக்கள் அன்பில் கரைகிறேன்:
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும்தான் நான் முதலமைச்சர். இது தமிழ்நாட்டு மக்கள் எனக்கு தந்த பொறுப்பு. அவர்களுக்காக பணியாற்ற வேண்டியது எனது கடமை. என்னால் முடிந்த அளவுக்கு பணியாற்றுக்கிறேன். ஓய்வின்றி பணியாற்றுகிறேன். எனது சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். அந்த உழைப்பின் பலனை தமிழக மக்களின் முகத்தில் பார்க்க முடிகிறது. உங்கள் (மக்கள்) அன்பில் நான் கரைகிறேன்.
திராவிட மாடலுக்கான பதில்:
தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து மக்கள் இங்கு பேசும் போது, அவர்களின் உதட்டில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. மனதில் இருந்தே வந்தன. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மகிழ்ச்சியும், புன்னகையுமே பதில் சொல்கிறது.
சாதி மதத்தால் பிரிப்பவர்கள்..
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என திருக்குறள் கூறுகிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என திராவிட மாடல் கூறுகிறது. சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் மக்களை பிரிவுப்படுத்தி பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்று புரியவே புரியாது. அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்று நன்றாக புரியும்.
அவசியம் இல்லை:
மக்களுக்கு சம்பந்தம் இல்லாத பதவிகளில் இருப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்சியின் முகம் அதிகார முகம் அல்ல. அன்பு. இந்த ஆட்சியின் முகம் என்பது ஆணவம் அல்ல. ஜனநாயகம். இந்த ஆட்சியின் முகம் என்பது அலங்காரம் அல்ல. எளிமை. இந்த ஆட்சியின் முகம் என்பது சனாதானம் அல்ல. சமூக நீதி. அதனால்தான் சிலரால் நாம் விமர்சிக்கப்படுகிறோம். பலரால் நாம் பாராட்டப்படுகிறோம்.