கரோனா சுகாதார அவசரநிலை இனி வராது – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

நியூயார்க்: கரோனா தொற்று பாதிப்பு குறித்த சுகாதார அவசர நிலை இனி வராது என உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கரோனா என்ற கொடிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் இந்த கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

கரோனாவை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும் பொது முடக்க கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. உலக சுகாதார அமைப்பு கரோனாவை சர்வதேச அவசரநிலையாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் கரோனா பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர குழு கூட்டம் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் தலைமையில் கூடியது.

கூட்டத்துக்குப் பின்னர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவிட்-19 பாதிப்பால் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தாலும், அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். கரோனா தொற்றுக்குப் பிந்தைய பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

கரோனா தொற்று இன்னமும் இருக்கிறது. தொடர்ந்து மக்களை கொல்கிறது. அது ஒரு சவாலாகவே உள்ளது. அதே நேரம் கரோனா குறித்து இனியும் மக்கள் கவலைப்பட தேவையில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றை தொடர்ந்து கண்காணித்து வந்த அவசரநிலைக் குழு, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்துள்ளது. அந்தக் குழுவின் ஆலோசனைப்படியே, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கரோனா பாதிப்பு தொடர்பான சுகாதார அவசரநிலை இனி ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் தொற்று குறைந்தது: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,961 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 30,041 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 9 பேர் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 5,31,659 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் விகிதம் 0.07% ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆகவும் உயிரிழப்பு விகிதம் 1.18% ஆகவும் உள்ளது. இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.