தென்னிந்தியாவில் முதல் முறையாக (கர்நாடகாவில்) பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர் பி.எஸ்.எடியூரப்பா. 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் உள்ள அவர், 8 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றுள்ளார். 2 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும், 3 முறை மாநில தலைவராகவும், 1 முறை துணை முதல்வராகவும், 4 முறை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். 80 வயதிலும் ஓயாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினேன்.
உங்களது அரசியல் வாழ்வில் 1972-ல் இருந்து தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறீர்கள். மாநிலத் தலைவர், முதல்வர் வேட்பாளர் என தேர்தலை பரபரப்பாக எதிர்கொண்டு இருப்பீர்கள். இந்த முறை ஆட்டத்தில் இருந்து வெளியே இருக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்?
நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்திருந்தாலும், தேர்தல் பணிகளை முன்பை் போல மும்முரமாக பார்த்து வருகிறேன். 80 வயதானாலும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கட்சிப் பணிகளை கவனிக்கிறேன். கர்நாடகா முழுவதும் பயணிக்கிறேன். முதல்வர் வேட்பாளராக இருந்த காலக்கட்டத்தில் இதைவிட பன்மடங்கு உழைத்திருக்கிறேன்.
2019-ல் நீங்கள் முதல்வரானபோது, இந்த முறை நிச்சயம் பதவி காலம் முடியும் வரை முதல்வராக இருப்பேன் என கூறினீர்கள். ஆனால் திடீரென ராஜினாமா செய்தபோது கண்ணீரோடு விடை பெற்றீர்கள். இப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் உங்களை முதுமை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது சரி என நினைக்கிறீர்களா?
என்னை யாரும் முதல்வர் பதவியில் இருந்து நீக்கவில்லை. நானாக முன்வந்து விலகினேன். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அவ்வாறு செய்தேன். பஞ்சாயத்து தலைவர் பதவியைக்கூட விட்டுத்தராத காலத்தில் நான் முதல்வர் பதவியையே விட்டுக்கொடுத்திருக்கிறேன். எனது இந்த தியாகத்தை கட்சி மேலிடமும் மக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். என் மீது இன்னும் இரண்டு மடங்கு அன்பு செலுத்துகிறார்கள்.
ஆனால் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸாரும் உங்களை பாஜக மேலிடம் ஏமாற்றிவிட்டதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்களே?
பாஜக மேலிடத் தலைவர்கள் என்னை ஏமாற்றவும் இல்லை. இந்தக் கட்சி எனக்கு துரோகம் செய்யவும் இல்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்பைவிட இப்போது என்னை அதிகம் மதிக்கிறார்கள். கட்சியில் எனக்கு முக்கிய பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்.
லிங்காயத்து வாக்கு வங்கியை மனதில் வைத்தே, இந்த தேர்தலில் உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக சொல்கிறார்களே?
அதெல்லாம் பொய். காங்கிரஸார் என்னை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது.
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட் டர், முன்னாள் துணை முதல்வர் லட்சுமன் சவதி உள்ளிட்டோர் விலகியது பாஜகவுக்கு பின்னடைவு தானே? அந்த இருவரும் லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களின் விலகல் பாஜகவின் லிங்காயத்து வாக்கு வங்கியை பாதிக்கும் என்கிறார்களே?
ஜெகதீஷ் ஷெட்டருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்க கட்சி மேலிடம் முன்வந்தது. அதை அவர் ஏற்காததால் மத்திய அமைச்சர் பதவிவரை பேசப்பட்டது. அதேபோல லட்சுமன் சவதியிடமும் மேலிடம் பேசியது. இருவரையும் கட்சியில் தக்கவைக்க நான் தனிப்பட்ட முறையில் போராடினேன். இருவரும் கட்சியில் எல்லா பதவிகளையும் அனுபவித்துவிட்டு இப்போது வெளியேறிவிட்டார்கள். இந்த தேர்தலில் நிச்சயம் தோற்பார்கள். அவர்களால் லிங்காயத்து வாக்கு வங்கி பாதிக்கப்படாது.
ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் மறுக்கப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ்தான் காரணம் என அவரே கூறி இருக்கிறார். உங்களது முதல்வர் பதவி பறிக்கப்பட்டபோதும் சந்தோஷின் பெயர் அடிபட்டதே?
இதில் பி.எல்.சந்தோஷின் பெயரை இழுப்பது தேவையற்றது. அவர் கட்சிக்காக 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். கட்சி மேலிடம் எடுத்த முடிவுக்கு பி.எல்.சந்தோஷை குறைகூறக்கூடாது.
மீண்டும் லிங்காயத்து முதல்வர் கோஷம் எழுந்துள்ளதே?
லிங்காயத்து, வீரசைவ சங்கங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் என்னை சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்தனர். மடாதிபதிகளும் பேசி இருக்கின்றனர். நான் எனது கருத்தை அவர்களிடம் கூறினேன். இறுதியில் இந்த விஷயத்தில் கட்சி மேலிடம்தான் முடிவை எடுக்கும்.
பாஜக மேலிடத் தலைவர்கள் தங்களோடு தொடர்பில் இருப்பதாக மஜத நிர்வாகிகள் கூறுகிறார்கள். அப்படியென்றால் தேர்தலுக்கு பின்பு மஜதவுடன் கூட்டணி அமைக்கப் போகிறீர்களா?
கடந்த காலத்தில் மஜதவுடன் கூட்டணி அமைத்ததால் பாஜகவுக்கு கசப்பான அனுபவமே கிடைத்தது. எனவே மீண்டும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக இடங்களை பிடிப்போம்.
ஒரு பக்கம் வாரிசு அரசியலை எதிர்ப்பதாக கூறிக்கொண்டே 20-க்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு பாஜகவில் சீட் வழங்கப்பட்டுள்ளது. உங்களது குடும்பத்தில் கூட ஒருவர் போட்டியிடுகிறாரே?
நான் இப்போது தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சிக்காக உழைத்த என் மகன் விஜயேந்திராவுக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள். இன்னொரு மகன் ஏற்கெனவே எம்பி ஆக இருக்கிறார். இது எப்படி வாரிசு அரசியல் ஆகும்? கட்சிக்காக உழைத்த குடும்பத்தினருக்கு சீட் கொடுப்பது வாரிசு அரசியல் ஆகாது.
கர்நாடக அரசியலில் மொழி சிறுபான்மையினரான தமிழர்களுக்கு தனிப்பட்ட நலத்திட்டங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறதே?
கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது கொண்டுவரும் நலத்திட்டங்களில் இங்குள்ள தமிழர்கள் பயனடைகிறார்கள். நான் முதல்வராக இருந்தபோது பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தேன். ஷிமோகாவில் உள்ள தமிழர்கள் என்னோடு நெருக்கமாக இருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும்.