கர்நாடகா: 3.5 ஆண்டுக்குப் பிறகு தேர்தல் களத்தில் சோனியா காந்தி – ‘காவிக்கட்சி கலக்கம்’ என காட்டம்!

கர்நாடகத்தில் இன்னும், 3 நாள்களில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பா.ஜ.க-வின் ஊழல்களைப் பட்டியலிட்டு, அவற்றை தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தி, காங்கிரஸார் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். சமீபத்தில், ‘பாரத் ஜோடோ’ யாத்திரை நடத்திய ராகுல் காந்திக்கு, கர்நாடகத்தில் பல இடங்களில் வரவேற்பு கிடைத்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ராகுல் காந்தி கர்நாடகா முழுவதிலும் பிரசாரம் செய்து வருகிறார்.

காங்கிரஸைப் பொறுத்தவரையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகிய, 5 பேர்தான் பிரசாரத்தை வழிநடத்தி வருகின்றனர்.

ராகுல், சித்தராமையா, சிவக்குமார்.

இப்படியான நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கர்நாடகா தேர்தலுக்காக களத்தில் இறங்கி பிரசாரத்தைத் தொடங்கினார். நேற்று இரவு, ஹப்ளி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

3.5 ஆண்டுகளுக்குப் பிறகு களத்தில்…

பல ஆண்டுகளாக நேரடியாக களத்தில் இறங்கி, பேச்சு, பேட்டி, அறிக்கை, பிரசாரம் எனப் புயலைக் கிளப்பிவந்த, சோனியா காந்தி இறுதியாக 2019-ல் நடந்த, ‘பாரத் பச்சோ Bharat Bachao’ யாத்திரையில் பங்கேற்றார். அதன் பிறகு, சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்கள், கோவா, மணிப்பூர், திரிபுரா, மேகாலயா என, எந்தத் தேர்தலிலும் நேரடியாக களத்தில் பிரசாரம் மேற்கொள்ளாமல் இருந்தார்.

சோனியா காந்தி

இப்படியான நிலையில், 3.5 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின், முதன் முறையாக கர்நாடகா தேர்தலுக்காக சோனியா, தேர்தல் களத்தில் வாக்கு சேகரிப்பது, காங்கிரஸ் கட்சியின் தேர்தலுக்கான நகர்வில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், சோனியா காந்தியுடன், ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட பலர் பங்கேற்றனர்.

‘காவிக்கட்சி கலக்கமடைந்துள்ளது…’

ஹப்ளியில் பேசிய சோனியா காந்தி, ‘‘வெறுப்பை பரப்பி அரசியல் செய்பவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட, ‘பாரத் ஜோடோ’ யாத்திரையால் காவிக்கட்சியான பா.ஜ.க கலக்கமடைந்திருக்கிறது. வெறுப்பை பரப்பவர்களால் கர்நாடகத்தில் எந்த ஒரு வளர்ச்சியையும் கொடுக்க முடியாது. அவர்கள், ஜனநாயகக் கொள்கைகள் தங்களது பாக்கெட்டுகளில் இருப்பதாக நினைக்கிறார்கள்.

கர்நாடகத்தில் பேசிய சோனியா காந்தி.

வரும் தேர்தலில் இங்கு பா.ஜ.க தோல்வியடைந்தால், மோடியின் ஆசி கர்நாடகாவுக்கு கிடைக்காது என, பகிரங்கமாக இவர்கள் மக்களிடம் மிரட்டல்களை விடுத்து வருகின்றனர். கர்நாடகா மக்கள் யாருடைய ஆசியையும் நம்பி இருப்பவர்கள் அல்ல; அவர்கள் தங்கள் சொந்த உழைப்பை நம்பி வாழ்ந்துவருபவர்கள் என்பதை பா.ஜ.க-வுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

‘அடக்குமுறைக்கு எதிராக குரல்’

பா.ஜ.க அரசின் கொள்ளை, பொய், ஆணவம், வெறுப்பு போன்றவற்றால் உருவான சூழலிலிருந்து விடுபடாமல், கர்நாடகா மட்டுமல்ல இந்த நாடும் முன்னேறாது.

நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல்

கர்நாடகா பகவான் பசவண்ணா, மகாகவி குவெம்பு ஆகியோரின் பூமி; ஆனால், ஒவ்வொரு நாளும் அவர்களை பா.ஜ.க அவமதித்து வருகிறது. சமூக நல்லிணக்கம், வளர்ச்சி, கொள்ளை மற்றும் கமிஷன் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க காங்கிரஸ் மட்டுமே உங்களின் நம்பிக்கை. தற்போது நடக்கும் அடக்குமுறை அரசுக்கு எதிராக குரல் கொடுப்பது நமது அனைவரின் கடமை’’ என பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

3.5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் களத்துக்கு சோனியா காந்தி வந்திருப்பது, கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற, காங்கிரஸ் எந்த அளவு தீவிரம் காட்டி வருகிறது என்பதை உணர்த்துகிறது. சோனியாவின் பிரசாரம் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, 13-ம் தேதி தேர்தல் முடிவில் பார்ப்போம்..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.