சென்னை: சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
கேரளாவில் இந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைக்கப்படுகின்றனர் என இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.
லவ் ஜிகாத் என உண்மைக்குப் புறம்பான கருத்துகளால் இந்தப் படம் மக்களிடம் பிளவு ஏற்படுத்துகிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து தற்போது பார்க்கலாம்.
தி கேரளா ஸ்டோரி இரண்டாம் நாள் வசூல்
இந்தியில் சுதிப்தோ சென் இயக்கியுள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. தி கேரளா ஸ்டோரி டீசர் வெளியான போதே இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. முழுக்க முழுக்க வகுப்புவாத பிரசாரத்தன்மை கொண்ட படம் இது என பலரும் குற்றம்சாட்டியிருந்தனர்.
கேரளாவில் இருந்து 32000 பெண்கள் முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என இயக்குநர் சுதிப்தோ சென் இப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் ஐஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெண்கள் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாகவும் தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான படம் என கூறிவிட்டு இஸ்லாமிய மதத்துக்கு எதிராக பிரசாரங்கள் செய்யப்பட்டுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதேபோல், முஸ்லிம் பெண்களையும் தரக்குறைவாக காட்டியுள்ளதாக பல இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மேலும், பிரிவினைவாதத்தை தூண்டும் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.
இத்தனை எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் கடந்து நேற்று முன்தினம் வெளியான தி கேரளா ஸ்டோரி முதல் நாளில் 7.5 கோடி ரூபாய் வசூலித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று 12.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதன்படி முதல் இரண்டு நாட்களில் மொத்தமாக 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்தப் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதேபோல், மத்திய பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரி விலக்கு அளிப்பதாக முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விமர்சனம் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், இந்தப் படம் இந்து பெண்களை தான் கேவலமாக சித்தரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.