பெங்களூரு: கர்நாடக தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் பேசிய ஆடியோ நேற்று சமூக வலை தளங்களில் வெளியானது.
அதில் கார்கே மற்றும் அவரது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் தரக்குறைவாகவும் பேசுவதாக இருந்தது. இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப் பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று பெங்களூருவில் கூறியதாவது: குல்பர்கா மாவட்டம் சித்தாப் பூரில் காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மணிகண்ட ரத்தோட் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் மீது கொலை, கொள்ளை, மோசடி உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த நவம்பர் 13-ம் தேதி பிரியங்க் கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அவர் இப்போது கார்கேவையும், அவரது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக பேசியுள்ளார். மிகவும் அவதூறாக பேசியுள்ளார். மணிகண்ட ரத்தோட் எவ்வளவு மோசமான நபர் என்பது கர்நாடகாவில் அனைவருக்கும் தெரியும். அவர் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு சுற்றுவதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். கர்நாடக போலீஸாரும் தேர்தல் ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். கார்கேவை கொல்ல நினைப்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா கூறினார்.
பசவராஜ் பொம்மை பதில்: இதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “இந்த விவகாரத்தை நாங்கள் மிக தீவிரமான ஒன்றாகக் கருதுகிறோம். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடைபெறும். சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.
பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், “அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல. அது பொய்யானது. நான் மல்லிகார்ஜுன கார்கே மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்” என விளக்கம் அளித்துள்ளார்.