டிரஸ் போட்டிருந்தாலும் நிர்வாணமாக பார்க்கலாம்.. இந்தாங்க மேஜிக் கண்ணாடி..! டம்மி கும்பலை தட்டித் தூக்கிய போலீஸ்

முன்னால் நிற்பவர் ஆடை அணிந்திருந்தாலும் நிர்வாணமாக காட்டும் எக்ஸ்ரே மேஜிக் கண்ணாடி விற்பனைக்கு இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்த சதுரங்க வேட்டை மோசடி கும்பலை கோயம்பேடு ஓட்டலில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பல வருடங்களுக்கு முன்பு வெளியான நெற்றிக்கண் மற்றும் பூவே பூச்சூடவா படங்களில் எதிரில் நிற்பவர்கள் ஆடை அணிந்திருந்தாலும் அவர்களை நிர்வாணமாக பார்க்கும் கண்ணாடி இருப்பதாக சில காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.

உண்மையில் அப்படிப்பட்ட கண்ணாடிகள் ஏதும் இல்லாத நிலையில் மகத்துவம் வாய்ந்த எக்ஸ்ரே மேஜிக் கண்ணாடிகள் தங்களிடம் விற்பனைக்கு இருப்பதாக கூறி பணம் கொழுத்த செல்வந்தர்களை வலையில் சிக்க வைத்து லட்சங்களை பறித்த சதுரங்க வேட்டை கும்பல் ஒன்று கையும் களவுமாக போலீசில் சிக்கி உள்ளது.

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருக்கும் பெங்களூரை சேர்ந்த சிவா சூர்யா என்பவர் தன்னிடம் மோசடியாக 6 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு துப்பாக்கியை கொண்டு மிரட்டுவதாக தெரிவித்து இருந்தார்.

கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையில் விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த பெங்களூருவை சேர்ந்த சிவா சூர்யா, கேரளாவை சேர்ந்த குபாய்ப், ஜித்து, இர்சாத், ஆகிய நான்கு பேரை சுற்றிவளைத்தனர். அவர்களின் அறையில் இருந்து கை துப்பாக்கி, தோட்டாக்கள், 2 செம்பு கலசங்கள், டம்மி நாணயங்கள், கருப்பு நிற அரிசி, கை விலங்கு, சங்கிலிப்பூட்டுக்கள், கண்ணாடிகள், ஆய்வுக்காக வைத்திருந்த பொருட்களையும் கைப்பற்றினர்.

இந்த கும்பல் தங்களிடம் விலை உயர்ந்த மேஜிக் கண்ணாடிகள் விற்பனைக்கு இருப்பதாகவும், கிடைப்பதற்கு அரிய அந்த கண்ணாடிகள் அணிந்து பார்த்தால் பெண்கள் ஆடை அணிந்திருந்தாலும் ஆடையின்றி நிர்வாணமாக தெரிவார்கள் என ஆசை வார்த்தை கூறி அதனை வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் பரப்பி நம்ப வைத்துள்ளனர்.

தங்களை தொடர்பு கொள்ளும் ஜொல்லர்களை தாங்கள் தங்கி உள்ள ஓட்டல் அறைக்கு வரவழைத்து கண்ணாடியை கையில் கொடுத்து போட்டு பார்க்க சொல்வார்கள் என்றும் வாங்க வந்தவர்கள் அதனை ஆவலுடன் அணிந்து பார்க்கும் போது ஒன்றும் தெரியாது என்றும் கூறப்படுகின்றது.

அப்போது அதனை வாங்கி சரிசெய்வது போல் நடித்து மீண்டும் கண்ணாடியை போட்டு பாருங்கள் என்று கையில் கொடுப்பது போல கண்ணாடியை கீழே போட்டு உடைத்து விட்டு வந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் இந்த கும்பல் பணத்தை கொடுக்க மறுக்கும் நபர்களிடம் இதோ காவல் அதிகாரியை வரவைக்கிறோம் என்று கூறி செல்போனில் தகவல் தெரிவித்ததும், வெளியில் இருக்கும் இந்த மோசடி கும்பலை சேர்ந்த இருவர் போலீஸ் போல உள்ளே வருவார்கள் என்று கூறப்படுகின்றது.

பின்னர் துப்பாக்கி, கைவிலங்குகளை காண்பித்து கைது செய்து விடுவதாகவும், பெண்களை நிர்வாணமாக பார்க்க நினைத்தவர்கள் தானே என்று அச்சுறுத்தி பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது.

இதனை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று பணத்தை கொடுத்துவிட்டு சென்ற சிலர் புகார் அளிக்கவில்லை என்றும் நாகராஜன் 6 லட்சம் ரூபாயை பறிகொடுத்ததால் போலீசில் புகார் அளித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மோசடி கும்பலை சேர்ந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பிளாக்மெயில் கும்பல் பயன்படுத்தியது சினிமாவில் பயன்படுத்தும் டம்மி துப்பாக்கி குண்டுகள், கைவிலங்கு என்பது தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.