தமிழகத்தில் கோடைக் காலம் பிறந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கை மற்றும் அதிக கோடை வெப்பத்தை குழந்தைகளால் தாங்கி கொள்ள இயலாத சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மே மாதம் 15 நாட்கள் குழந்தைகள் மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
கோடை விடுமுறை
அதன்படி மே 10ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதி வரை விடுமுறை ஆகும். இது அங்கன்வாடி பணியாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. இந்த விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு உலர் உணவுகள் வழங்க வழிவகை இல்லை. அதேசமயம் ”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் பயன்படுத்த தயாராக உள்ள உணவு, ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் இதர சுகாதார கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து உணவுகள்
அதன்படி, கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்தை முற்றிலும் தவிர்ப்பதற்கு பதிலாக, சத்துமாவையே வீட்டிற்கு எடுத்து செல்லும் வகையில் வழங்கலாம். இந்நிலையில் 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் 50 கிராம் சத்து மாவை 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 15 நாட்களுக்கான 750 கிராம் சத்துணவை வீட்டிற்கு எடுத்து சென்று பயன்படுத்தும் வகையில் மே 9ஆம் தேதி பயனாளிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள்
தமிழகத்தில் அங்கன்வாடி பணிகளின் கீழ் முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முறையே மே இரண்டாவது வாரம், மூன்றாவது வாரம், நான்காவது வாரம் கோடை விடுமுறை வழங்கப்படும்.
குழந்தை வளர்ச்சி பணிகள்
இதையொட்டி மே 2வது வாரம் அங்கன்வாடி உதவியாளர்களும், 3வது வாரம் முதன்மை அங்கன்வாடி பணியாளர்களும், 4வது வாரம் குறு அங்கன்வாடி மையங்களில் முதன்மை அங்கன்வாடி பணியாளர்களும் இடையூறின்றி உணவூட்டும் பணிகளை மேற்கொள்வர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குநருக்கு அறிவுறுத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்பருவ கல்வி குழந்தைகள்
வழக்கமாக முன்பருவ கல்வி மூலம் பயன்பெறும் 2 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன் படி, நாள் ஒன்றுக்கு 500 கிலோ கலோரி மற்றும் 12 கிராம் புரதச் சத்து உணவு ஆண்டில் 300 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இது 50 கிராம் சத்து மாவு, சமைத்த உணவு முட்டை, பயறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்குவதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.