தி கேரளா ஸ்டோரி.. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. .. நானும் பார்க்க போகிறேன்.. தமிழிசை சொல்றத கேளுங்க

சென்னை:
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் கலாச்சாரத்திற்கும் கேரளா ஸ்டோரி திரைப்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. கேரளாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ் இயக்கத்தில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதே இந்தப் படத்தின் மையக்கரு.

இந்த திரைப்படம் நேற்று வெளியான நிலையில், திரையரங்குகள் முன்பு முஸ்லிம் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழிசை செளந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறியதாவது:

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அண்ணன் ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜாதி, மதத்தால் மக்களை பிரிப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்று புரியாது என மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். நான் அவரிடம் ஒன்றை கேட்கிறேன். நீங்கள் எதை பிரித்து பார்த்து, இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்.

பிரதமர் மோடி அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறார். ஆளுநர்களும் அப்படிதான் செய்கிறார்கள். நாங்கள் எந்த விதத்திலும் யாரையும் பிரித்து பார்ப்பது கிடையாது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரான படம். ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவானவர்கள் என யார் நினைக்கிறார்களோ, அவர்கள் தங்களுக்கு இந்த படம் எதிரானது என நினைப்பார்கள். தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களுக்கு இப்படம் ஆதரவாக இருப்பதாக தோன்றும். அது அவரவர் மனநிலையை பொறுத்தது.

இவர்களுக்கு வேண்டிய கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரமாம். ஆனால், சொல்ல வேண்டிய கருத்தை கூறினால் அது கருத்து சுதந்திரம் கிடையாதாம். உடனே தடை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்கள். அதனால், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை அனவைரும் பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து. நாங்கள் பார்க்க போகிறோம். உண்மை எங்கு இருந்தாலும் அதை பார்க்க வேண்டும். இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.