நியூயார்க்: உலகளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவாகி வரும் நிலையில் அந்நாட்டில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் ஜி ஜின்பிங்கின் அரசு செயல்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
அந்த வகையில் சமீபத்தில், 100 யுவானை ஓய்வூதியமாகப் பெறும் ஒருவர் மளிகை கடையில் நின்று என்ன பொருட்களை வாங்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் வீடியோ சீன சமூக வலைதளங்களில் வைரலானதாகவும் அதனை சீன அரசு நீக்கியதாகவும் நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் சீனாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் அங்குள்ள மக்களை அதிருப்தியில் தள்ளி இருப்பதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
சீனாவை சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “என் முகத்தை தினமும் நீரால் சுத்தம் செய்கிறேன். ஆனால் என் முகத்தைவிட என் பர்ஸ் சுத்தமாக இருக்கிறது” என்ற பாடலை பாடி பதிவேற்றியுள்ளார். இந்த நபரின் பக்கத்தையும் சீன அரசு தடை செய்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் சீனாவில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர், கரோனாவினால் பாதிக்கப்பட்டபோது உள்ளூர் அதிகாரிகளால் அவர் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளானார். இதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் அனுதாப அலைகள் எழுந்தது நினைவு கூரத்தக்கது.
அனைவருக்கும் பொதுவான செழிப்பை ஏற்படுத்தும் ஒரே பொதுவுடமை நாடு என்று தன்னை சீனா அடையாளப்படுத்துகிறது. அதே நேரத்தில் கடந்த மார்ச் மாதம், சீன அரசின் சைபர் பிரிவு, “இது வேண்டுமென்றே சோகத்தைக் வெளிப்படுத்தும் வீடியோ. கம்யூனிசம் கட்சி மற்றும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும், தீங்கு விளைவிக்கும் தகவல்களை அளிக்கும் வீடியோக்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தது.
மேலும் சமூக வலைதளங்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளின் சோகமான வீடியோக்களை பதிவிடுவது இந்த பிரிவால் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு சீனா அதன் வறுமை நிலையை மறைக்கும் செயலில் ஈடுபடுகிறது என்று அமெரிக்க ஊடகங்கள் குற்றச்சாட்டுகின்றன.