தாலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா.. கேப்பில் நுழைந்த பாகிஸ்தான்.. உற்று நோக்கும் உலக நாடுகள்

இஸ்லாமாபாத்: ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில், சீனா- பாகிஸ்தான் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கன் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. சுமார் 20 ஆண்டுகளாக அங்கே அமெரிக்கப் படைகள் இருந்த நிலையில், மக்களாட்சி அங்கு நடந்து வந்தது.

அமெரிக்கப் படைகள் கடந்த 2021இல் ஆப்கனில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்தது. வெறும் சில வாரங்களில் அவர்கள் ஒட்டுமொத்த ஆப்கனையும் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

ஆப்கன்: தாலிபான்கள் ஆட்சியில் மீண்டும் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் அங்கே வளர்ச்சி பணிகள் தடைப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை அப்படியே நிறுத்திவிட்டன. இதன் காரணமாக இப்போது பொருளாதார ரீதியில் ஆப்கன் திணறி வருகிறது.

உலக நாடுகளின் முதலீடு தேவை என்ற நிலையே அங்கு உருவாகியுள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்து சீனா பெல்ட் அண்ட் ரோடு முயற்சியை எடுத்துள்ள நிலையில், அதை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். ஆப்கன் பொருளாதாரத் தடைகளால் சிக்கித் தவிக்கும் நிலையில், இதுபோன்ற திட்டங்கள் அவர்களுக்குப் பெரியளவில் உதவும்.

மெகா ஒப்பந்தம்: இஸ்லாமாபாத் சென்றிருந்த சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரியை சந்தித்தார். அப்போது ஆப்கனில் மறுசீரமைப்பு செயல்பாட்டிற்கு உதவும் வகையில், $60 பில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதன் பிறகு இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், “ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடரவும், வளர்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய முயற்சி: சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜி ஜின்பிங் அரசு அங்கே பெல்ட் அண்ட் ரோடு முயற்சியை எடுத்தது. இருப்பினும், அப்போது அங்கு இருந்த ஆப்கன் அரசு அமெரிக்கா உடன் நெருக்கம் காட்டியதால் இந்தத் திட்டம் செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது அங்கே கடும் நிதி நெருக்கடி நிலவும் நிலையில், சீன திட்டத்திற்குத் தாலிபான்கள் உடனடியாக ஓகே சொல்லிவிட்டனர்.

இஸ்லாமாபாத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது ஆப்கன் தூதரும் உடன் இருந்தார். சீனாவின் முதலீடு என்பது ஆப்கன் நாட்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சீன நிறுவனம்: முன்னதாக வடக்கு அமு தர்யா படுகையில் இருந்து எண்ணெய் எடுக்கச் சீனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் துணை நிறுவனத்துடன் ஆப்கன் அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

A Key Agreement Between China, Taliban along with pakistan

மேலும், வெளிநாடுகளில் இருக்கும் ஆப்கன் நாட்டிற்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துகள் இப்போது முடக்கப்பட்டுள்ள நிலையில், அதை விடுவிக்க வேண்டும் என்றும் சீன மற்றும் பாகிஸ்தான் அமைச்சர்கள் வலியுறுத்தினர். பயங்கரவாத நடவடிக்கைக்குப் பயன்படுத்துவார்களோ என்ற அச்சத்தில் வெளிநாடுகளில் இருக்கும் ஆப்கான் மத்திய வங்கியின் சுமார் 9 பில்லியன் டாலரும் முடக்கப்பட்டுள்ளது.

முதலில் ஆப்கன் பொருளாதாரத்தை மேம்படுத்த இதில் பாதி தொகையை அளிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண்களுக்குத் தாலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

இப்போது சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகள் அவர்களுக்கு எதிராகவே உள்ளது. இந்தச் சூழலில் இப்போது ஆப்கனுடன் சீனா கைகோர்த்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.