சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தைக் காண வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த சந்திப்பு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில்,”கலியுகத்தில் எதார்த்தமாக உண்மையாக நடந்து கொள்பவர்கள் மற்றும் நியாயமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்களை ஒரு சிலர் ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் இல்லாததால் விமர்சனங்களை முன்வைத்து விரோதியாக பார்ப்பார்கள்.
கால சக்கர சுழற்சியில் மாய வலைகள் அறுக்கப்பட்ட பிறகு உண்மைத் தன்மை புரிய வரும்; அப்போது விமர்சனம் செய்தவர்கள் கடந்தகால செயல்களை அறிந்து வருத்தப்படுவார்கள்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க கழக ஒருங்கிணைப்பாளர் சென்றிருக்கிறார்; அதே பாக்ஸில் இருக்கும் தமிழக முதல்வரின் மருமகன் சபரீசன், “நான் அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளரை நேரில் பார்த்ததில்லை; அவரை பார்த்து பேச வேண்டும்” என்று தனது விருப்பத்தை உதவியாளர் மூலம் தெரிவித்திருக்கிறார்.
அதன் பிறகு கழக ஒருங்கிணைப்பாளரும், சபரீசனும் அனைவரது முன்னிலையில் கை கொடுத்து மரியாதை நிமித்தமாக ஐந்து நிமிடம் பேசிவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்நிகழ்வு குறித்து கட்சியில் ஒரு சில சுயநல கூட்டத்தின் தூண்டுதலால் கழக ஒருங்கிணைப்பாளர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று விஷமத்தனமான விமர்சனங்களை உருவாக்கி வருகிறார்கள். அதைப்போல, திமுக கட்சியில் சபரீசனை எதிர்த்து, “அவர் அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஏன் சந்தித்தார் ” என்று ஏதேனும் விமர்சனம் வருகிறதா? அது ஏன் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமது கழகத்தில் ஒரு சுயநல கூட்டம் நமது கட்சியை அபகரிப்பதற்காகவும் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காகவும் யாரெல்லாம் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற சூழ்ச்சியில் இது போன்ற விஷத்தன்மையான கருத்துக்களை கட்சிக்குள் செலுத்தி, ஒரு சில தொண்டர்களை விஷமாக்கி வைத்திருக்கிறார்கள்.
திமுக கட்சி தலைவர்களை கழக ஒருங்கிணைப்பாளர் பார்த்தார், சிரித்தார், பேசினார் என்று உப்பு சப்பு இல்லாத காரணங்களை பேசி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ஒரு சில தொண்டர்களை ஏமாற்றியும் தமிழக மக்களை குழப்பியும் வருகிறார்கள்.
கழக ஒருங்கிணைப்பாளர் 46 ஆண்டு காலம் நமது கட்சியின் விசுவாசம் மிக்க உண்மை தொண்டனாக இருந்தார் என்று ஜெயலலிதாவால் புகழப் பெற்று தமிழக மக்களால் உண்மையானவர் என்று பெயர் வாங்கியவர்.
தான் சார்ந்த கட்சியின் வளர்ச்சிக்காக கடந்து வந்த பாதைகளில் எவ்வளவு முள்களையும் கற்களையும் கடந்து, வலிகளை சுமந்து கட்சியை வளர்த்திருக்கிறார் என்று மனசாட்சியின் படி சுய அறிவோடு சிந்தித்துப் பார்த்து, விமர்சனங்களை முன் வையுங்கள்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கலியுகத்தில் எதார்த்தமாக உண்மையாக நடந்து கொள்பவர்கள் மற்றும் நியாயமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்களை
ஒரு சிலர் ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் இல்லாததால் விமர்சனங்களை முன்வைத்து விரோதியாக பார்ப்பார்கள்.கால சக்கர சுழற்சியில் மாய வலைகள் அறுக்கப்பட்ட பிறகு உண்மைத் தன்மை புரிய…
— Jayapradeep (@VPJayapradeep) May 7, 2023