பெங்களூரு: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலமாக்கியுள்ளது. அந்த படத்துக்கு தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுகிறது என கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதீப்டோ சென் இயக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் உள்ள பெல்லாரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது: கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்யப் போவதாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அனுமான் பக்தர்களை அக்கட்சி அவமதித்துள்ளது. எனவே, தேர்தலில் வாக்களிக்கும்போது ‘ஜெய் பஜ்ரங் பலி’ என கூறிவிட்டு வாக்களியுங்கள்.
தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என உலகமே ஒன்று திரண்டு நிற்கிறது. ஆனால் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலுக்காக தீவிரவாதத்தின் முன்பு மண்டியிட்டுள்ளது.
நேற்று வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இந்தியாவுக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளது. அதில் தீவிரவாதத்தால் ஏற்படும் விளைவுகள் விவரிக்கப்பட்டுள்ளன. கேரளா போன்ற அழகான மாநிலத்தில் எத்தகைய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது என அந்த திரைப்படம் பேசுகிறது.
ஆனால், காங்கிரஸ் அந்த படத்துக்கு தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவ முயற்சிக்கிறது. தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி, தோட்டாக்கள், ஆயுதங்களை தாண்டி புதியமுகம் இருக்கிறது. அதனை அந்தபடம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவும் காங்கிரஸ், எப்படி கர்நாடகாவை அவர்களிடம் இருந்து காப்பாற்றும்? இவ்வாறு மோடி பேசினார்.