“ஆளுநரை வைத்து எங்களை அச்சுறுத்த நினைத்தால், நாங்கள் அஞ்ச மாட்டோம்!” – முதல்வர் ஸ்டாலின்
சென்னை, பல்லாவரத்தில் `திராவிட மாடல்’ அரசின் இரண்டாண்டுக்கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஆளுநரை வைத்து எங்களை அச்சுறுத்த நினைத்தால், அஞ்ச மாட்டோம். ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் திராவிடம் என்பதால், அதனைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார். தமிழ்நாட்டில் நிலவும் அமைதியை சீர்குலைக்க ஆளுநர் வந்திருக்கிறாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆளுநருக்குச் சொல்கிறேன், திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல.
சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் காலாவதியாக்கியதுதான் திராவிடம். அந்நிய படையெடுப்பாக இருந்தாலும், ஆரிய படையெடுப்புகளாக இருந்தாலும், அவற்றை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். அதனால்தான் அதை பார்த்து ஆளுநர் பயப்படுகிறார். ஒன்றிய அரசை ஆளும் அதிகாரம் பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும்தான் இருக்கிறது. அதேபோல மாநிலத்தை ஆளும் அதிகாரம் முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும்தான் இருக்கிறது.
சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும்தான் இருக்கிறது. இதை மாற்றி தனக்கு ஏதோ சர்வாதிகாரம் இருப்பதுபோல் ஆளுநர் நினைத்துக் கொள்கிறார். அ.தி.மு.க குறைசொல்வதைப் பற்றி, நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஆளுநர் எதற்காக எதிர்க்கட்சிக்காரர்போல பேசி வருகிறார். தமிழ்நாட்டை முன்னேற்றமடையச் செய்த திராவிட மாடலை இந்தியா முழுவதும் கொண்டு சேர்ப்போம். ஒன்றிய அளவில் ஒற்றுமையை உருவாக்கி உன்னதமான அரசை தலைநகர் டெல்லியில் அமைப்போம்” என்றார்.
நீட் தேர்வெழுதும் மையத்துக்குச் செல்லும் மாணவர்கள்! – இடம்: படப்பை, சென்னை
நீலகிரி: நீட் தேர்வெழுத ஆர்வத்துடன் வந்த மாணவ மாணவிகள்!
சென்னை: இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்!
18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, கோவை, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வேட்புமனுவில் சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டியதாக எழுந்த புகாரின்பேரில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது!
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான `நீட் தேர்வு’ இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 18,72,000 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதவிருக்கின்றனர். 499 மையங்களில் நடைபெறவிருக்கும் இந்தத் தேர்வு, மதியம் 2 மணிக்குத் தொடங்கி, மாலை 5:30 மணி வரை நடைபெறவிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஆங்கிலம், இந்தி, தமிழ் உட்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வு தொடர்பான விரிவான தகவல்களை இந்த லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்… https://neet.nta.nic.in/